தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேர இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு 28.07.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 8-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டின்படி, ஐ.டி.ஐ-களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள் இவற்றிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு விண்ணப்ப கட்டணம் ஆகியவை அனைத்தும் இணையதளத்திலுள்ள விளக்கக் கையேட்டில் (Prospectus) தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மாற்றுச் சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழ் சாதிச் சான்றிதழ் ஆதார் கார்டு புகைப்படம் மற்றும் சிறப்பு நிலை முன்னுரிமைச் சான்றிதழ்கள் (Special category Priority Certificate) இருப்பின் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். எனவே ஐ.டி.ஐ பயிற்சியில் சேர விரும்பும்; மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்திலுள்ள மாதிரி விண்ணப்பத்தினை பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.50/- பற்று அட்டை (Debit card) / கடன் அட்டை (Credit card) / இணைய வழி வங்கிக் கணக்கு மற்றும் யுபிஐ (UPI) யை தேர்ந்தெடுத்து Google Pay/Paytm வாயிலாக செலுத்தலாம்.
மேலும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு இ-சேவை மையங்கள் பார்வையிட்டு இணைய தளத்தில் கொடுக்கப்பட்ட அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்து கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரரின் மதிப்பெண் மற்றும் இன ஒதுக்கீட்டின்படி தரவரிசைப்பட்டியல் இதே இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதற்கேற்ப ஒதுக்கப்பட்ட தேதிகளில் அரசு விதிகளுக்கு உட்பட்டு ஆன்லைன் கலந்தாய்வு வாயிலாக சேர்க்கை நடைபெறும்.
மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது சரியான அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை குறிப்பிட வேண்டும். கலந்தாய்வு நடைபெறும் விவரங்கள் அனைத்தும் குறுந்தகவல்களாக மட்டுமே அனுபப்பப்படும் என்பதால் இதில் தனிக்கவனம் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசால், மாதந்தோறும் உதவித் தொகை ரூ.750/- (வருகை நாட்களுக்கு ஏற்ப), கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், விலையில்லா சீருடை, காலணி, -பயிற்சிக்கு தேவையான நுகர்பொருட்கள் ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநர்/முதல்வர் அவர்களை 0461-2340133 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட அட்சியர் தெரிவித்துள்ளார்.

