ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும் வேறு வழக்கில் கைதாகி மரணமடைந்தவரின் தாய்க்கு ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையை கனிமொழி எம்பி வழங்கினார்.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு, மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்கு காயங்களும், பலருக்கு மனஉளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில் 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இது தவிர, ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச் சாலையிலேயே இறந்துவிட்டபடியால், வாழ்வாதாரம் இழந்து வாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரண உதவியை திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி வழங்கினார். இந்நிகழ்வில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

