மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் தலைமையில் தலைமைக் காவலர்கள் திரு. பென்சிங், திரு. மாணிக்கம், திரு. சாமுவேல், திரு.செந்தில் குமார், திரு. மகாலிங்கம், திரு. முத்துப்பாண்டி மற்றும் திரு. திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் ரோந்து மேற்கொண்டபோது முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தையாபுரம் உப்பாத்து ஓடைப்பாலம் அருகே சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சாவை வைத்திருந்த தூத்துக்குடி மட்டக்கடை சேதுராஜா தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் ஹரிகரன் (21) என்பரைக் கைது செய்து, அவரிடமிருந்த 1.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்படி தனிப்படையினர் மேலசண்முகபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த துர்க்கை ராஜ் மகன் சங்கு கணேசன் (36) மற்றும் தூத்துக்குடி மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த ஜெயவீரபிச்சை மகன் ஜெயகண்ணன் (40) ஆகிய இருவரும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. ஆகவே மேற்படி தனிப்படையினர் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மதுபானம் விற்பனை செய்த மேற்படி 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த மேற்படி தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.


