நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நக்கலமுத்தன்பட்டி கிராம பகுதி பொதுமக்கள் சார்பாக புதிதாக நிறுவப்பட்ட 22 சிசிடிவி கேமராக்களை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார்ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நக்கலமுத்தன்பட்டி கிராம சுற்றுவட்டார பகுதிகளில் அப்பகுதி பொதுமக்கள் சார்பாக புதிதாக அமைக்கபட்ட 22 சிசிடிவி கேமராக்களை அப்பகுதியிலுள்ள சக்தி விநாயகர் கோயிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவதன் மூலம்; இரண்டு நன்மைகள். ஓன்று குற்றங்கள் நடக்காமல் தடுப்பது, மற்றொன்று நடந்த குற்றத்தை கண்டுபிடிப்பது. காவல்துறையில் சி.சி.டி.வி கேமரா மூலம் எளிதில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்றனர் என்றும் இது போன்று இன்னும் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களிலும் புதிதாக சிசிடிவி கேமராக்களை அமைத்து குற்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மேலும் தற்போது கொரோனா வைரஸ் 2ம் கட்டமாக தீவிரமாக பரவிவருவதால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசத்தை உரிய முறையில் மூக்கு, வாய் ஆகியவற்றை முற்றிலுமாக மறைத்து முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும், மேலும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டு கொள்வதன் மூலம் நம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும் பொதுமக்கள் கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு விதித்துள்ள கட்டுபாடுகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் எடுத்துரைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அக்கிராம பொதுமக்கள் சார்பாக முத்துராஜ்,செல்வராஜ், அய்யாலுசாமி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.
இந்நிகழ்வின் போது கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் கலைகதிரவன், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் சோபா ஜென்சி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.


