ஆவடி அருகே ஜெபம் செய்வதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு பகுதியை சேர்ந்த ஜெனி (42). (பெயர் மாற்றப்பட்டுள்ளது)குடும்ப பிரச்சினை காரணமாக இவர், மன அழுத்தத்தில் இருந்து வந்தார். ஜெபம் செய்தால் சரியாகிவிடும் என்று உறவினர் ஒருவர் அவரை ஆவடியை அடுத்த மோரை நியூ காலனி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு அழைத்துச்சென்றார்.
அங்கிருந்த பாதிரியார் ஸ்காட் டேவிட் (53) ஜெபம் செய்தார். அதன்பிறகு மீண்டும் ஜெபம் செய்வதற்கு தேவாலயத்துக்கு தனியாக வருமாறு ஜெனியிடம் பாதிரியார் கூறியதாக தெரிகிறது. அதை நம்பி அவரும் தேவாலயத்துக்கு தனியாக ஜெபம் செய்ய சென்றார். அப்போது பாதிரியார் ஸ்காட் டேவிட், ஜெபம் செய்வதாக கூறி ஜெனியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெனி அளித்த புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் ஸ்காட் டேவிட்டை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

