சேலம் மாநகர போலீஸ் கமிஷ்னர் சந்தோஷ்குமார், உத்தரவின் பேரில் தெற்கு சரக காவல் உதவி கமிஷ்னர்கள் மணிகண்டன், கமலக்கண்ணன் ஆகியோர்களின் தலைமையில் இன்று சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரபாத் சிக்னல் முதல் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் வரை காவல்துறையினர் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் கொரோனா பரவலின் போது நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றிய துண்டுப் பிரசுரம் அனைத்து வணிக நிறுவனங்கள், ஆட்டோ வேன் ஓட்டுனர்கள் மற்றும் பாதசாரியாக செல்லும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் முக கவசம் அணிவதன் முக்கியத்துவம், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, அத்தியாவசிய தேவை இன்றி யாரும் வெளியே வரவேண்டாம் எனவும், முக கவசம் அணியாமல் சாலையில் வந்தவர்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டது, மேலும் தொண்டு நிறுவனம் சார்பில் வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு இலவச கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இப்பேரணியில் சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் ரமேஷ் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



