காரைக்கால் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஆலய பிரம்மோற்சவ தேர் மற்றும் தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீ கயிலாசநாத சுவாமி ஸ்ரீ நித்யகல்யாணப்பெருமாள் வகையறா தேவஸ்தானத்தை சேர்ந்த ஸ்ரீ கைலாசநாத சுவாமி ஆலய பிரும்மோற்சவ விழா சென்ற ஆண்டு கொரோனா பரவலால் தடைபட்டது. நடப்பு ஆண்டு இவ்விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என உபயதாரர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை இவ்விழாவிற்கான துவஜாரோகணம் எனப்படும் ரிஷபக்கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக காலை 7 மணியளவில் அஸ்திரதேவர் மற்றும் ரிஷபக்கொடியை படிச்சட்டத்தில் பெரிய வீதியில் வலம் வரச்செய்தனர். தொடர்ந்து ஆலயம் வந்தடைந்ததும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓதி சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் ஆலய துவஜஸ்தம்பத்தில் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து துவஜஸ்தம்பத்திற்கு பால், தயிர் மற்றும் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோயில்கள் நிர்வாக அதிகாரி M. காசிநாதன், அறங்காவலர் வாரிய தலைவர் R.A.R.கேசவன், துணைத் தலைவர் P.A.T.ஆறுமுகம் செயலாளர் M.பக்கிரிசாமி பொருளாளர் D.ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் கே. பிரகாஷ், விழா உபயதாரர்கள் மற்றும் ஏராளமான பக்த பெரு மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எதிர்வரும் 27 ஆம் தேதி பெரிய தேரோட்டம் நடைபெறுகிறது. 30ம் தேதி அம்மையார் ஐக்கியவிழாவும் 31ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறும் என அறங்காவல் வாரியத்தினர் தெரிவித்தனர்.


