வேதாரண்யத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.
வேதாரணியம் மே 3
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட தோப்புத்துறையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.சிறப்பு தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். தொழுகை முடிந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் , சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் முழுமையாக கொண்டாட முடியாமல் போனது. தற்போது பெருந்தொற்று மிகவும் குறைந்த நிலையில் இன்று இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியோடு ஈகைத் திருநாளை கொண்டாடி வருகிறார்கள்.உலகம் முழுக்க அமைதி செழிக்கவும், மக்களுடைய வாழ்விலே வளங்கள் பெருகவும் பிரார்த்தனை மேற்கொண்டு இருக்கிறோம். அண்டை நாடான இலங்கையில் மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடி கொண்டிருக்கின்ற போது அவர்களுக்கு உதவ வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கும், விரைவிலேயே தமிழகத்திலிருந்து உதவிப் பொருட்களை அனுப்பக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிற தமிழக முதல்வருக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவிப்பதாக தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.


ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

