நாகை மாவட்டம், பனங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் – மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ பங்கேற்பு
நாகை மே 2
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது.
இதில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகமது ஷா நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆம் தேதி தொழிலாளர்; தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பாக கிராமசபாக்கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
கிராமத்தை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்வதே கிராம சபா கூட்டமாகும். இந்த கிராமசபை கூட்டத்தில் மக்களுக்கு எல்லா விஷயங்களும் தெளிவாக தெரியப்படுத்தப்பட வேண்டும். இதுவரை நாம் என்ன பயனடைந்திருக்கிறோம். இனி என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த 3 மாதத்திற்குள் கிராம சபா கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் நமக்கு தேவையான திட்டங்கள் என்ன என்பதை முதலில் பொதுமக்களாகிய நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். இக்கூட்டத்தை பொருத்தவரை மக்களே மக்களுக்கு தேவையான விஷயங்களை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மூலமாக செயல்படுத்திக்கொள்வது ஒரு சிறந்த வாய்ப்பு. 2011ம் ஆண்டோடு முடிந்துபோன இத்திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீண்டும் அறிவித்துள்ளார். இந்த கிராமம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்திலும் இடம்பெற்றுள்ளது.
இந்த கிராமத்தில் 17 துறைகள் ஒருங்கிணைந்து கிராம மக்களின் தேவைகளை அறிந்து அதனை பூர்த்தி செய்வதற்கான பொறுப்பு ஒவ்வொரு துறை அலுவலர்களுக்கும் உள்ளது. இந்த வருடம் 2022-2023க்கு 100 நாள் வேலையில் என்ன திட்டம் செயல்படுத்த வேண்டும் என்பதையும், இந்த கிராமசபா கூட்டத்தில் கூறப்படுகின்ற திட்டத்தில் உங்களுடைய அனைத்து கருத்துகளையும் தெரிவிக்கலாம்.
இந்த பனங்குடி கிராமத்தை நீர்நிறைந்த கிராமமாக உருவாக்கவேண்டும். அதற்கு இக்கிராமத்தில் உள்ள குளங்களை தூர்வாரி ஆழப்படுத்துவது மற்றும் பண்;ணை குட்டைகள் அமைப்பதன் மூலமாகவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட முடியும். நமக்கு மட்டுமின்றி வருங்கால சந்ததியினருக்கும் பயன்படும் வகையில் நீர்வளத்தை பாதுகாத்திடவேண்டும். கிராமத்தை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும். சுகாதாரம் என்பது வீட்டிலிருந்த தான் ஆரம்பம் ஆகிறது. அனைவரும் குப்பைகளை குப்பை தொட்டில் போட வேண்டும். கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டிலும் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒரு குற்றம் ஆகும். அனைவரும் சுத்தமான பசுமையான கிராமமாக மாற்றுவதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
பள்ளிகளில் 20 நபர்கள் கொண்ட பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு பள்ளிகள் மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. நமது மாவட்டத்தில் நமக்கு நாமே திட்டத்தில் பஞ்சாயத்து மூலமாக செயல்படுகின்ற திட்டங்கள் கிராம புறமக்களுக்கு நேரடியாக சென்று சேர்வதை காண்காணிப்பதற்காகத்தான் இதுபோன்ற கிராமசபா கூட்டம் நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

இக்கிராம சபா கூட்டத்தில் உதவி இயக்குநர் ஊராட்சிகள் சவுந்தரராஜன், பனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பார்த்தி ஆரோக்கியமேரி, வேளாண்மை இணை இயக்குநர் ஜாக்குலா அக்கண்டராவ், அரசு அலுவலர்கள், ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

