கன்னியாகுமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சி ஆலோசனை கூட்டம்.
கன்னியாகுமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின், மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான சாதாரண நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள் 2022-க்கான அறிவிக்கை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் 26.01.2022 அன்று வெளியிடப்பட்டதன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி, குழித்துறை, பத்மநாபபுரம், குளச்சல் மற்றும் கொல்லங்கோடு ஆகிய நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 28ஆம் தேதி முதல் 4 ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. வேட்பாளர்களுடன் 2 நபர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பதிவு செய்யப்படும். 5-தாம் தேதி அன்று வேட்புமனுக்கள் பரிசீலனை மேற்கொள்வதோடு, 07.02.2022 அன்று வரை வேட்புமனுக்கள் திரும்ப பெறுவதற்கான காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 19 ஆம் அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இவற்றில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளுக்கு 233 வாக்குச்சாவடிகள் 2,44,531 வாக்காளர்களும், 4 நகராட்சிகளுக்குட்பட்ட 99 வார்டுகளுக்கு 140 வாக்குச்சாவடிகளில் 1,08,731 வாக்காளர்களும், 51 பேரூராட்சிகளுக்குட்பட்ட 828 வார்டுகளுக்கு 951 வாக்குச்சாவடிகளில் 6,71,687 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளார்கள்.
மேலும், வாக்கு எண்ணும் பணியானது நாகர்கோவில் எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளி, ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கன்னியாகுமரி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லெட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் நேசமணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆற்றூர் கல்லூரி, பத்மநாபபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 மையங்களில் 23-ஆம் தேதிஅன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும்.
கொரோனா மூன்றாம் அலைதொற்றின் காரணமாக மாநில தேர்தல் ஆணையம் மற்றும் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தேர்தல் தொடர்பான பொதுகூட்டங்கள், வாகன பிரச்சாரம், பேரணிகள், விளம்பர பதாகைகள் வைக்க அனுமதி கிடையாது. சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர்களின் அனுமதி பெற்று 100 நபர்களுக்கு மிகாமல் உள் அரங்குகளில் பிரச்சாரம் மேற்கொள்ளலாம்.
கன்னியாகுமரி மாவட்ட நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களில் 192 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, இவ்வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது. மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எதுவும் இல்லை. நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 4 பறக்கும் படைகள் 12 குழுக்களாக சுழற்சி முறையில் சோதனை மேற்கொள்வார்கள். நகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் 4 பறக்கும் படைகள் 12 குழுக்களாக சுழற்சி முறையில் சோதனை மேற்கொள்வார்கள். 51 பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் 17 பறக்கும் படையினர் என மொத்தம் 75 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் சோதனை மேற்கொள்வார்கள். இன்றைய வேட்புமனு தாக்கலில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு எந்தவொரு நபரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. பேரூராட்சிகளை பொறுத்தவரை ஆற்றூர் பேரூராட்சி 1 நபர், நல்லூர் பேரூராட்சி 2 நபர்கள் என மொத்தம் 3 நபர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், செய்தியாளர்களிடம் கூறினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்.ஆஷா அஜித், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாகராஜன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

