தந்தைக்கு முதல் மரியாதை! பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் செயலால் திண்டுக்கல் திமுகவினர் உற்சாகம்!
திண்டுக்கல்
திண்டுக்கல்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி நேர்காணல் நடத்தியிருக்கிறார்.
இதில் விஷேசம் என்னவென்றால் பொதுவாக இது போன்ற வேட்பாளர்கள் நேர்காணலை மாவட்டச் செயலாளராக இருப்பவர்கள் தான் நடத்துவார்கள்.
அந்த வகையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் ஐ.பி.செந்தில்குமார் தான் நேர்காணல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் கட்சியின் சீனியரும், தனது தந்தையுமான அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு முதல் மரியாதை கொடுத்து கவுரவித்திருக்கிறார் செந்தில்குமார் எம்.எல்.ஏ.
திண்டுக்கல் கிழக்கு
திண்டுக்கல் மாவட்ட திமுகவை பொறுத்தவரை கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு மாவட்டத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி. செந்தில்குமார் எம்.எல்.ஏ.வும், மேற்கு மாவட்டத்திற்கு அமைச்சர் சக்கரபாணியும் மாவட்டச் செயலாளர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் முன்பு ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் அமைச்சர் ஐ.பெரியசாமி.
முதல் மரியாதை
இந்நிலையில்
வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி தான் நேர்காணல் நடத்தினார். வழக்கமாக இந்த நேர்காணலை மாவட்டச் செயலாளர் என்ற முறையில் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தான் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் தன்னை விட திண்டுக்கல் மாவட்ட திமுகவினரை அதிகம் அறிந்து வைத்திருக்கும் தனது தந்தையும், அமைச்சருமான ஐ.பெரியசாமியை நேர்காணல் நடத்த வைத்து முதல் மரியாதை கொடுத்து கவுரவித்திருக்கிறார் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ.
கிழக்கு மாவட்டம்
இதனால் நேர்காணலில் கலந்துகொள்ள சென்ற திமுக நிர்வாகிகளிடம் பழைய நினைவுகள் சிலவற்றை அசைபோட்டவாறு கேள்விகளை கேட்டிருக்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி. சீட் கொடுக்கிறாரோ இல்லையோ பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை எல்லாம் நினைவுகூர்ந்து பேசினாரே அது போதும் எங்களுக்கு என பலரும் உற்சாகத்துடன் கூறுவதை கேட்க முடிகிறது. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திற்குள் ஆத்தூர், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், தாடிக்கொம்பு, உள்ளிட்ட பேரூராட்சிகள் வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, கொடைக்கானல் நகராட்சிகளும் வருகின்றன.
பஷீருக்கும் மரியாதை
இதனிடையே திண்டுக்கல் முன்னாள் நகர்மன்றத் தலைவரும், தொ.மு.ச. நிர்வாகியுமான பஷீர் அகமதுவையும் நேர்காணலின் போது அருகில் வைத்துக்கொண்டார் அமைச்சர் ஐ.பெரியசாமி.

பொதுவாகவே ஐ.பெரியசாமி தரப்புக்கும் பஷீர் அகமது தரப்புக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கும் எனக் கூறப்படும் நிலையில் இந்த நிகழ்வும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதனை பார்க்கும் பொழுது அமைச்சர் ஐ பெரியசாமியும்
அவரது மகன் செந்தில்குமார் எம்எல்ஏ ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திமுக தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரையும் அரவணைப்போடு வழி நடத்துவது தெளிவாகிறது உள்ளாட்சி தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வெற்றியை பெறுவதற்கு ஏதுவாக தற்போது தேர்தல் பணியை முடுக்கி விட்டு விட்டார்கள் அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் செந்தில்குமார் எம்எல்ஏ ஆகியோர் இதனால் திண்டுக்கல் மாவட்ட திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்
செய்தி தொகுப்பு ரபீக் அகமது வத்தலகுண்டு

