கன்னியாகுமரி மாவட்ட ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்க காசினை – அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்கள்
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் (13.01.2022) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கி பேசுகையில்
தமிழக முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம் மிகவும் பயனுள்ள திட்டமாகும். இத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்த தமிழக முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் அடிப்படையில், இன்றையதினம் 2380 பட்டதாரி பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், 11.90 கோடி திருமண நிதியுதவியும், 970 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், 2.43 கோடி திருமண நிதியுதவியும் என மொத்தம் 3350 பயனாளிகளுக்கு ரூ.14.33 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் சிறு உதவியாக இருந்தாலும், பேருதவியாக இருக்கும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தெந்த வழிகளில் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும், அவர்களின் பொருளாதார சூழ்நிலையை புரிந்து கொண்டும், அனைவருடைய வளர்ச்சியில் பங்களிக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டு செயல்பட்டு வருகிறார்கள். அதனடிப்படையில்தான் ஒவ்வொரு துறை சார்ந்த திட்டங்கள் அறிவித்து, செயல்படுத்தப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. இத்திட்டத்தினால் பயனடைகிற ஒவ்வொரு பயனாளிகளுடைய இல்வாழ்கை சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நாளையதினம் பொங்கல் விழாவை கொண்டாட இருக்கிறோம். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தார்கள். அனைத்து மதம், அனைத்து சமுதாய மக்களும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையாக கொண்டாடுகின்ற விழாவாக இருக்க வேண்டும் என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பொங்கல் விழாவினை சமத்துவ பொங்கலாக அறிவித்தார்கள். அவர்களின் வழியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்கள். வருகின்ற தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகின்ற, அமைதியை தருகின்ற ஒரு புத்தாண்டாக அமைய வேண்டுமென அனைவரையும் வாழ்த்துகிறேன். இவ்வாறு மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் விஜய குமார், சட்டமன்ற உறுப்பினர்கள்.ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்),.எம்.ஆர்.காந்தி (நாகர்கோவில்), மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சிவப்பிரியா, ஊராக வளர்ச்சி திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட சமூக நல அலுவலர்.ஆர்.சரோஜினி, கண்காணிப்பாளர்.தேவதாஸ், வழக்கறிஞர்கள். மகேஷ்,சதாசிவம், மற்றும் ஜீவா,சந்திரசேகர் உட்பட அலுவலர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு: சுரேஷ்குமார்

