இந்திய குடிமைப் பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வுக்கான ஆயத்த பயிற்சி
வேதாரண்யம் டிச 22
மீனவ சமுதாயத்தைச் சார்ந்தபட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க சென்னை, அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்துடன் (அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக் கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் ஒரு புதிய திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஆணை வழங்கியுள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் இதற்கான வழிகாட்டுதல்களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மீன்வளத்துறை இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேற்காணும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தகுதியான பயனாளிகள் அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தின் இணையதளமான சிவில்சர்வீஸ்கோச்சிங்.காம் என்ற இணையத் தளத்தில் விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பதாரர் மேற்காணும் இணையதளத்தில் விண்ணப்பித்த பிறகு பெறப்படும் பதிவு எண் மற்றும் விவரங்களை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், நாகப்பட்டினம் (தெற்கு) அலுவலகத்தில் சமர்ப்பித்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்
வேதாரண்யம்

