ஐந்தாவது தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி சிறப்பு சித்த மருத்துவ முகாம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை சார்பில் 5-வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் சித்த மருத்துவ கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம் இந்தியமருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை சார்பில் 5-வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு வடக்குபொய்கைநல்லூர் கோரக்கசித்தர் ஆசிரம வளாகத்தில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் மற்றும் சித்த மருத்துவ கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், கீழ்வேளுர் எம்.எல்.ஏ நாகைமாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
சித்த மருத்துவம் என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் பாரம்பரியமான, மருத்துவ முறையாகும். சித்த மருத்துவம் நோய் வராமல் தடுக்கவும், நோய் வந்த பின் குணமாக்குவதற்கும் பல்வேறு மூலிகை மருந்துகளையும் வழங்கிய சித்தர்கள், நீண்ட நாள் வாழ்வதற்கானமருத்துவ முறைகளை (காயகற்பம்) வழங்கினார்கள். ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற இயற்கையோடு இயைந்த மருத்துவ முறையாக சித்த மருத்துவம் விளங்குகிறது. அண்மையில் பரவிய கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதில் கபசுர குடிநீர் போன்ற சித்த மருந்துகள் பெரும்பங்கு வகித்தது.
இந்த சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு சர்க்கரைநோய், சோரியாசிஸ், வெண்புள்ளி, சிறுநீரககல், பக்கவாதம் போன்ற பல்வேறு நோய்களுக்கு மருத்துவர்களால் மருத்துவ பரிசோதனை நடத்தி அதற்கானமருந்துகளும், மேலும், நிலவேம்புபொடி, கபசுரக்குடிநீர், மூலிகை தைலங்கள், மாத்திரைகள் மற்றும் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. மேலும், மூலிகை செடிகளான ஆடாதோடை, தூதுவளை, கற்பூரவள்ளி, அருகம்புல், மஞ்சல் கரிசலாங்கண்ணி, துளசி, முடக்கறுத்தான் போன்ற பல்வேறு மூலிகை செடிகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
சித்த மருத்துவத்தால் பல்வேறுநோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. பொதுமக்கள் அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சித்த மருத்துவ பிரிவில் சிகிச்சையை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன், கோரக்க சித்தர் கோவில் ஆசிரம நிர்வாக அறங்காவலர் ஜீவானந்தம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், உதவி மருத்துவ அலுவலர்கள், மருந்தாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
வேதாரண்யம்.

