நுங்கம்பாக்கம் பகுதியில் ஆட்டோவில் பயணி தவறவிட்ட லேப்டாப்பை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் அலோய்சியஸ் சேவியர் லோபஸ் என்பவர் கடந்த 10.12.2021 அன்று தனது வீட்டிலிருந்து ஆட்டோவில் பயணித்து சென்னையில் ரிப்பன் மாளிகை மற்றும் கலெக்டர் அலுவலகங்களுக்கு சென்று விட்டு இரவு அதே ஆட்டோவில் வீட்டிற்கு வந்து இறங்கியபோது, மறதியாக லேப்டாப்பை ஆட்டோவிலே தவற விட்டு சென்றுள்ளார். மறுநாள் 11.12.2021 அன்று தனது லேப்டாப்பை ஆட்டோவில் விட்டு சென்றதை உணர்ந்த அலோய்சியஸ் சேவியர் லோபஸ் என்பவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். காவல் ஆய்வாளர் சேட்டு, உதவி ஆய்வாளர் சாமுவேல், தலைமைக்காவலர் குகநாதன், இரண்டாம் நிலைக்காவலர் சபரிநாதன் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு மேற்படி ஆட்டோ ஓட்டுநரை கண்டுபிடித்து விசாரணை செய்து லேப்டாப்பை மீட்டு புகார் கொடுத்த 1 ½ மணி நேரத்தில் உரிமையாளர் அலோய்சியஸ் சேவியர் லோபஸ் என்பவரிடம் லேப்டாப்பை பத்திரமாக ஒப்படைத்தனர். லேப்டாப்பை பெற்றுக்கொண்ட அலோய்சியஸ் சேவியர் லோபஸ் காவல் துறையின் பணியை பெரிதும் பாராட்டினார்.
காவல் பணியில், சிறப்பாக செயல்பட்டு, ஆட்டோவில் தவறவிட்ட லேப்டாப்பை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

