தூத்துக்குடியில் அந்த அமைப்பின் நிா்வாகிகள் நான்சி, ஜெயம் பெருமாள், தனலட்சுமி, முருகன் ஆகியோா் செய்தியாளர்களிடம் கூறியதாவது : நாட்டின் வளர்ச்சியில் தொழிற்சாலையின் வளர்ச்சி இன்றியமையாதது. தொழில் வளத்தை வேலைவாய்ப்பை பெற்றுதரும் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க வேண்டும். ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் 1996-97ல் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சமூகப் பொறுப்பை அதன் வணிகக் கட்டமைப்பில் கொண்டுள்ளது.
2018ல் நிறுவனம் மூடப்பட்டபிறகும், 2021ல் அதன் CSR நடவடிக்கைகளுக்காக 60 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாடு ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் தத்தளிக்கும் நேரத்தில், ஸ்டெர்லைட் தானாக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முன்வந்தது, 2,000 டன்களுக்கு மேல் தூய்மை, மருத்துவ தர ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழ் மக்களின் உயிரைக் காப்பாற்றி நாட்டிற்கும் மாநிலத்தின் 32 மாவட்டங்களுக்கும் நன்மை வழங்கியது.
கடந்த மூன்று ஆண்டுகளில் தாமிரா வித்யாலயம் திட்டத்தின் மூலம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில், இதுவரை 2 கோடியே 21 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் தாமிர சுரபி திட்டத்தின் மூலம் முதலில் 20 கிராமங்களை சேர்ந்த 8 ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்து வந்தன. தற்போது இத்திட்டம் கூடுதலாக 13 கிராமங்களை சென்றடைகிறது. இதன் மூலம் இராண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். 91 லட்ச ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில் 47 லட்சத்து 74ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
பசுமை தூத்துக்குடி திட்டத்தின் கீழ் 10 லட்சம் மரக்கன்றுகளை இலக்காக கொண்டு இதுவரை 1.15 லட்சம் மரங்கள் நடப்பட்டு, பிரமாரிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் இதுவரை 48லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த 400 பேருக்கு திறன் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வேதாந்தா அறக்கட்டளையுடன் இணைந்து 2 திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
சாமிநத்தம் கிராமத்தில் 3லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நாப்கின் உற்பத்தி அலகு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அரசின் நாப்கின் கொள்முதல் திட்டத்தில் 12 பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் தினசரி குறைந்தபட்சம் 350 ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர். பல கிராமங்களில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ஒரு கோடியே 26 லட்ச ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் தற்போது வரை 15 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 75 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 36 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 20ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கடற்கரை கிராமங்களை சேர்ந்த 16 மாணவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த 26லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 4 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. நேரடி வேலை வாய்ப்புகளுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவரை தூத்துக்குடி கடற்கரை கிராமங்களை சேர்ந்த 115 விண்ணப்பங்கள் தேர்வு செயப்பட்டுள்ளன.
மக்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை எளிதாக்குவதற்காகவும், ஒருங்கிணைப்பதற்காகவும் தாமிர சேவை மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். வரும் ஆண்டுகளில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு மருத்துவமனை மற்றும் நவீன பள்ளிகள் உட்பட தூத்துக்குடி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிறைவேற்ற உள்ளது. ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், அதன் CSR திட்டங்களால் தூத்துக்குடிக்கு பயனளிப்பது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட 1 லட்சம் குடும்பங்களுக்கு வேலை மற்றும் வாழ்வாதாரத்தை அளித்து, தமிழக அரசு அனுமதித்தால், தூத்துக்குடி மக்கள் பெறும் அனைத்து நன்மைகளையும் புதிய அரசு பரிசீலிக்கும் என்று நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

