
செய்தி மக்கள் தொடர்பு துறையில் திருநெல்வேலி மண்டலத்திற்கு அண்ணா இணை இயக்குனராக நியமனம்!
தூத்துக்குடி,டிச.12:
செய்தி மக்கள் தொடர்புதுறையில் திருநெல்வேலி மண்டலத்திற்கு அண்ணா இணை இயக்குனராக நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
செய்தி மக்கள் தொடர்பு துறை சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி என 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதனைச்சுற்றியுள்ள மாவட்டங்களை ஒருங்கிணைத்து இணை இயக்குனர்களை கூடுதலாக பணிகளை மேற்கொள்ள அரசு ஆணை
பிறப்பித்துள்ளது.
அதன்படி சென்னை மண்டலத்திற்கு சரவணன், திருச்சி மண்டலத்திற்கு மருதப்பிள்ளை, கோவை மண்டலத்திற்கு சுப்பிரமணியம், தஞ்சாவூர் மண்டலத்திற்கு கிரிராஜன்,மதுரை மண்டலத்திற்கு பழனியப்பன், திருநெல்வேலி மண்டலத்திற்கு அண்ணா ஆகிய இணை இயக்குனர்களை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலி மண்டலத்திற்கு இணை இயக்குனராக பொறுப்பேற்க உள்ள பொறுப்பேற்க உள்ள அண்ணா தேனி மாவட்டம் சின்னமனூர் தாலுகா முத்தல்லாபுரம் ராசு அவர்களின் மகன் ஆவார். அண்ணா அவர்களின் தந்தை ராசு, மறைந்த தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான மு.கருணாநிதியோடு மிசா போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்ற பல போராட்டங்களில் பங்கேற்று சிறைவாசம் அனுபவித்துள்ளார்.
கலைஞர் கருணாநிதியின் நம்பிக்கை நட்சத்திரமாக முத்தல்லாபுரம் ராசு விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு மிசா போராட்டத்தில் திமுக தலைவர் சிறைச்சாலையில் இருக்கும்பொழுது அவருடன் கைதாகி இருந்த திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கருணாநிதியை விடுவிக்க வேண்டும் என்று சிறைச்சாலை உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் முத்தல்லாபுரம் ராசு அவர்களின் மனைவி இறந்த செய்தி கேள்விப்பட்டும் தலைவர் விடுதலை ஆனால் மட்டுமே நான் வெளியே செல்வேன் என அந்த அளவிற்கு திமுக தலைவர் மீது அதிதீவிர பற்றுள்ளவர். இவரது மகன்கள் அண்ணா, நல்லதம்பி ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதி அவர்களால் உதவி மக்கள் தொடர்பு துறை அலுவலர்களாக நியமிக்கப்பட்டார்கள். இதில் நல்லதம்பி செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அண்ணா திருநெல்வேலி மண்டலத்திற்கு இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பணியாற்றிய செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலராக பணியாற்றிய தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம் போன்ற பகுதிகளில் பத்திரிகையாளர்களுடன் இணக்கமாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றிய இடங்களில் கடைநிலை ஊழியர் வரை அனைவரையும் அரவணைத்து பணிகளை மேற்கொள்பவர்.
நெல்லை மாநகராட்சியில் துணை இயக்குநராக இவர் பணியாற்றிய போது, சிறப்பாக செயலாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் செய்தித்துறையில் சிறப்பாக பணியாற்றிய அண்ணா தென்மண்டலத்திற்குட்பட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்தித்தொகுப்பு: எம். ஆத்திமுத்து

