ராஜதந்திரம்.. யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் மூவ்.. அடுத்தடுத்து ஸ்கோர் செய்யும் முதல்வர் பழனிசாமி!
சென்னை : நினைத்து பார்க்க முடியாத அறிவிப்புகள் மூலம் முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மக்கள் மத்தியில் ஸ்கோர் செய்து வருகிறார். தேர்தல் நடக்க இன்னும் 10 மாதங்களுக்கும் குறைவாக உள்ள நிலையில் தமிழக முதல்வரின் அறிவிப்புகள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட போது, பலரும் ஆச்சர்யமான முடிவாகவே இதை பார்த்தனர். அப்போது அரசியல் தெரிந்த சிலரை தவிர சாதாரண பொது மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி அவ்வளவு பிரபலம் கிடையாது. ஆனால் தமிழக அரசியலில் தனக்கென்று ஒரு இடத்தை முதல்வர் பழனிசாமி ஏற்படுத்தி உள்ளார்.
முதல்வராக பதவி ஏற்று தகுதி நீக்க வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள், ஸ்டெர்லைட் போராட்டம், துப்பாக்கி சூடு என்று பல்வேறு பிரச்சனைகளை, எதிர்ப்புகளை தாண்டி முதல்வர் பழனிசாமி தனக்கு என்று ஒரு பாதையை, அரசியல் ஸ்டைலை உருவாக்கி உள்ளார். சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடக்க உள்ள நிலையில், இவரின் ஒவ்வொரு மூவும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ”designated survivor” என்று அரசியல் வல்லுநர்கள் பலர், பலமுறை அழைத்துள்ளனர். அமெரிக்க அரசியலில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த ”designated survivor” என்ற வார்த்தையின் அர்த்தம் ”தகுதியான வேட்பாளர்” என்று கூறலாம். பொதுவாக அமெரிக்காவில் அதிபர், துணை அதிபர் இருவருக்கும் ஏதாவது நேர்ந்தால், கைது செய்யப்பட்டால், மரணம் அடைந்தால், அந்த சமயத்தில் ஒருவரை திடீரென அதிபராக தேர்வு செய்வார்கள். அவையில் இருக்கும் மூத்த உறுப்பினர்கள், திறமையானவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும்.
சமயங்களிலும் செனட்டர்களும் கூட இப்படி ”designated survivor” ஆக தேர்வு செய்யப்பட்டு அதிபராக வாய்ப்புள்ளது. இப்படி தமிழகத்தில் இக்கட்டான சூழ்நிலையில் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ”designated survivor” தான் எடப்பாடி பழனிசாமி. இப்படிப்பட்ட தலைவர், தற்போது தமிழக அரசியலின் மிக முக்கியமான புள்ளியாக மாறியுள்ளார். அரசியலில் இவர் தவிர்க்க முடியாத நபர் என்று சொல்வதற்கு.. கடந்த சில மாதங்களில் இவர் எடுத்த மூன்று முக்கியமான முடிவுகளை உதாரணமாக சொல்லலாம்!
முதல் விஷயம் என்று பார்த்தால், மும்மொழி கொள்கையை அதிரடியாக எதிர்த்தது. பாஜக கூட்டணியில் அதிமுக இருப்பதால், மும்மொழி கொள்கையையே, இந்தி திணிப்பை தமிழக அரசு எங்கே ஏற்றுக்கொள்ளுமோ என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் அதற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல், புதிய கல்விக் கொள்கை ஒப்புதல் பெறப்பட்ட இரண்டு நாட்களில் தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு அனுமதி இல்லை என்று அறிவித்தார். இது அண்ணா திராவிட கட்சி.. இந்தி திணிப்பை எப்போதும் ஏற்க மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்தார்.
அடுத்ததாக கட்சிக்குள் முதல்வர் வேட்பாளருக்காக எழுந்த பிரச்சனையை சாமர்த்தியமாக எதிர்கொண்டார் முதல்வர் பழனிசாமி. 2021 சட்டசபை தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளர் ஓ.பி.எஸ் ஆ? அல்லது இ.பி. எஸ் ஆ? என்று விவாதம் எழுந்தது. இது தொடர்பாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரிய விவாதங்களை எழுப்பியது. ஆனால் இந்த பிரச்சனை கட்சிக்குள் பெரிய பூதாகரமாகி, பிளவு ஏற்படும் நிலையை எட்டாமல் போனதற்கு முதல்வர் பழனிசாமியின் துரிதமான நடவடிக்கையும் காரணம் என்று கூறலாம்.
துரிதமாக அமைச்சர்களை வைத்து மத்தியசம் பேசியது. என்ன அதிருப்தி என்பதை பேசி உடனடியாக தீர்த்தது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதன் அவசியத்தை அதிமுகவினருக்கு உணர வைத்தது என்று முதல்வர் பழனிசாமி இந்த பிரச்சனையை மிக நேர்த்தியாகவே கையாண்டார். அதிலும் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இணைந்து அறிக்கை வெளியிட்டது எல்லாம் அதிமுகவினருக்கு மகிழ்ச்சியை, நிம்மதியை கொடுத்த மூவ் என்று கூறலாம்.
இதில் முதல்வர் எடுத்த மூன்றாவது முடிவுதான் யாரும் எதிர்பார்க்காத முடிவு என்று கூறலாம். இப்படி ஒரு விஷயத்தை செய்யலாம் என்று யாருமே நினைக்கவில்லை.. அதுதான் அரியர் மாணவர்கள் தேர்வுக்கு பீஸ் கட்டி இருந்தாலே அவர்கள் பாஸ் என்று கூறியது. தமிழக இளைஞர்கள் இடையே இந்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பிஇ முடித்து வெளியேறும் பல லட்சம் பேரில் பல்லாயிரம் பேர் அரியர் வைத்துள்ளனர்.
அதிலும் சிலர் எம்1, எம்2, எம்3 என்று பல வருடங்களாக 4-5 அரியர்களை கிளியர் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். டிகிரி கிடைக்காத காரணத்தால் இவர்களால் அதிக சம்பளத்தில் பெரிய வேலைகளுக்கும் செல்ல முடிவது இல்லை. தமிழகத்தில் பல லட்சமும் இளைஞர்கள் இப்படி அரியர் உடன் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒரே அறிவிப்பில் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார் முதல்வர் பழனிசாமி. மொத்தமாக பல லட்சம் இளைஞர்களுக்கு இதன் மூலம் பிஇ டிகிரி கிடைக்க போகிறது.
மொத்தமாக இளைஞர்களை தன் பக்கம் இழுக்கும் வகையில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இளைஞர்கள் மத்தியில் முதல்வருக்கு இதனால் பெரிய பாசிட்டிவ் இமேஜ் உருவாகி உள்ளது. இதனால் முதல்வரை வாழ்த்தி மாவட்டம் தோறும் கட் அவுட்கள் மின்னுகிறது. இது தேர்தல் நேரத்தில் வாக்குகளாக மாறவும் வாய்ப்புள்ளது. பீஸ் கட்டாத மாணவர்களுக்கும் அரியரை கிளியர் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வைக்கும் கோரிக்கைக்கும் இதுவே காரணம் ஆகும்.
இதனால் சட்டசபை தேர்தலுக்காக திமுக கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு சென்றுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போது, அதிமுகவை திமுக எப்படி அணுகியதோ அதேபோல் அணுக வேண்டிய கட்டாயத்திற்கு சென்றுள்ளது. ஸ்டாலினுக்கும், திமுகவிற்கும் கண்டிப்பாக அதிமுகவும், முதல்வர் பழனிசாமியும் டப் பைட் கொடுப்பார்கள் என்று கூறுகிறார்கள். 2021 சட்டசபை தேர்தல் கண்டிப்பாக தமிழகத்தில் விறுவிறுப்பாக இருக்க போகிறது!

