மும்மொழி திட்டத்தை எதிர்க்கும் திமுகவினர் இரட்டை வேடத்தை பொதுமக்களுக்கு தோலுரித்துக் காட்ட பள்ளிகள் முன்பு மவுன போராட்டம் நடத்த முடிவு : பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் அதிரடி
மும்மொழிக் கொள்கையில் திமுக இரட்டைவேடம் போடுவதை கண்டித்து திமுக நடத்தும் பள்ளிகள் முன்பு மவுன போராட்டம் நடத்த பாஜக இளைஞரணி கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைமையகத்தில் வைத்து மாவட்ட தலைவர் பி.என்.பால்ராஜ் முன்னிலையில், இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் செல்வம், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மும்மொழிக் கல்வி திட்டத்தில் திமுக கபடநாடகம் ஆடுகிறது என்பதை பொதுமக்களுக்கு விளக்க பாஜக இளைஞரணி சார்பில், மவுன போராட்டம் நடத்த உள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், திமுக நிர்வாகிகள் கல்வி ஸ்தாபனங்கள் நடத்தி வருகிறார்கள். அங்கு இந்தி கற்பிக்கப்படுகிறது. அவர்கள் எதிர்க்கும் மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
வசதி படைத்தவர்கள் மட்டும்தானா இந்தி படிக்க வேண்டும், சாதாரண மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களும் இந்தி படிக்கக்கூடாதா? கல்விக் கொள்கையில் திமுக நடத்தி வரும் இரட்டை வேடத்தை பொதுமக்களுக்கு தோலுரித்துக் காட்ட மாநிலம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளிகள் முன்பு, பாஜக இளைஞரணி சார்பில் மவுன போராட்டம் நடத்த இருக்கிறோம். இதற்கான அறிவிப்பு திருச்சியில் நடைபெறும் பாஜக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் சந்தனகுமார், கனகராஜ், மாவட்ட செயலாளர் விஎஸ்.பிரபு, வக்கீல் பிரிவு செயலாளர் மகேந்திரன், இளைஞரணி செயலாளர் பிரபுஇ ஊடக பிரிவு செயலாளர் பாலமுருகன், முன்னாள் நகர செயலாளர் தேவகுமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்திதொகுப்பு கண்ணன்

