தமிழகத்தின் அனைத்து ரேஷன், டாஸ்மாக் கடைகளில் அரசு இலவசமாக கபசுரகுடிநீர் வழங்க வேண்டும். முதல்வருக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் நிறுவன தலைவர் இசக்கி ராஜா கோரிக்கை
தூத்துக்குடி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன், டாஸ்மாக் கடைகளிலும் கபசுர குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் இசக்கி ராஜா கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. பலியானோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கடந்த 6 மாத காலமாக ஊரடங்கால் தமிழகத்தின் பொருளாதாரம் சரிவையும், மக்களின் வாழ்வாதாரமும் பாhதிக்கப்பட்டுள்ளது.
அதனால் மற்ற மாநிலங்களைப் போல் ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும், மக்கள் கரோனா தொற்றில் இருந்து விடுபட ஆண்டவனை வழிபட, அனைத்து ஆலயங்களையும் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கரோனா பாதிப்பிலிருந்து ஏழை மக்கள் விடுபட ஒரே மருந்து கபசுர குடிநீர்தான். எனவே அனைத்து ரேஷன், கடைகளிலும், தேவைப்படின் மதுக்கடைகளிலும் கூட கபசுர குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

