வேதாரண்யம் நகராட்சி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகத்தில்
அடிக்கடி ஏற்படும் தடைகளை சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
வேதாரண்யம் நவ 3
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி கடற்கரை சார்ந்த பகுதியாகும். இங்கு நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையுடையதாக இருந்ததால் கொள்ளிடம்-வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் கொள்ளிடம் முதல் வேதாரண்யம் வரையிலான சுற்றுவட்டார கிராம மக்கள் குடிநீர் தேவை பூர்த்தி அடைந்தது.
ஆனால் அந்த திட்டத்தில் கடந்த ஆறுமாத காலமாக சரிவர தண்ணீர் விநியோகம் நடைபெறவில்லை. வேதாரண்யம் நகராட்சி பகுதியில் வாரத்தில், மாதத்தில் இரண்டு முதல் ஆறுநாட்கள் தண்ணீர் விநியோகம் நடைபெறுவது இல்லை. கிராமப்புறத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே விநியோகம் நடைபெறுவதாக கூறுகின்றனர். காரணம் கேட்டால் பராமரிப்பு என காரணம் சொல்கின்றனர். எந்தவிதமான முறையான முன் அறிவிப்பும் இல்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீர் தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது.
வேதாரண்யம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் சுமார் 31 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். திருவிழா காலமான தற்போது 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய இருநாட்கள் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட விநியோகம் நடைபெறவில்லை. இதனால் மக்கள் குடிநீர் பைப்புகளை தேடி மழையிலும் அலைகின்றனர். அந்த நீரும் உவர்ப்பு தன்மையுடையதாக உள்ளது.
எனவே நகராட்சி அமைப்பினரும், அரசு நிர்வாகமும் உடன் மக்கள் நலனில் அக்கறை செலுத்தி குடிநீர் விநியோகத்தை சீரமைத்து சுகாதாரமான குடிநீர் வழங்கி தொற்றுநோய் மற்றும் குடிநீர் பிரச்சினை தீர்த்து மக்கள் நலன் காக்க வேண்டுமென பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்த்துள்ளனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

