தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதைதொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதியின் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.
குறிப்பாக கிரேட் கார்டன் ரோடு, காசுக்கடை பஜார் ரோடு, வ.உ.சி.சாலை, விஇ.ரோடு, தேவர்புரம் சாலை, பிரையன்ட் நகர், ரயில் நிலையம் சாலை, அண்ணா நகர், பொன் சுப்பையா நகர், முத்தம்மாள் காலனி, கலைஞர் நகர், ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மெல்ல ஊர்ந்தபடி செல்கின்றன. மேலும் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே இருப்பதால் விடுமுறை நாளான இன்று பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் மக்கள் கூட்ட நெரிசலும் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மீட்பு பணி செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொட்டும் மழையிலும் ஆய்வு மேற்கொண்ட அவர், பிரையன்ட் நகர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை மாநகராட்சி முயற்சியின் பேரில் வெளியேற்றும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதை தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பு அளவை விட அதிக அளவு அதிகமாக மழை பெய்து உள்ள காரணத்தினால் கனமழை பெய்த ஒரு சில நாட்களிலேயே சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. இருப்பினும் வடகிழக்கு பருவமழையை முன் எதிர்பார்த்து மாநகராட்சியின் சார்பில் செய்யப்பட்டிருந்த முன்னேற்பாட்டின் காரணமாக பெருமளவு பாதிப்பு ஏற்படாதவாறு தவிர்க்கப்பட்டுள்ளது. ராட்சத மின் மோட்டார்களை பொருத்தி அவற்றின் மூலமாக குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ள நீரை வெளியேற்றி மழைநீர்வடிகால்வாய் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல மாநகராட்சியின் விரிவுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் மீட்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி மாநகராட்சியை பொருத்தமட்டில் 28 இடங்கள் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி கட்டப்பட்ட பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் மூலமாக வெள்ளநீர் வெளியேற்றும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. எனவே விரைவில் குடியிருப்புகளை சூழ்ந்த நீர் வெளியேற்றப்படும். மாநகராட்சியின் சார்பில் தயார் நிலையில் 180 மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை தேவையான பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பணிகளில் பயன்படுத்தப்படும். எனவே பெரும் மழை வந்தாலும் அதை சமாளிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ளது என்றார்.

