தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் முடிவு பெற்ற நிலையில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
தற்போது புதிதாக லே செயலாளர் டி.கிப்ட்சன் தலைமையிலான நிர்வாகத்தினர் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர்களுக்கு பேராயர் ஒத்துழைப்பு கொடுக்காமல், போட்டியாக பல விசயங்களில் ஈடுபடுவது திருமண்டல மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த குழப்பமான சூழ்நிலையில் பிரதம பேராயரின் அலுவலகத்திற்கு இங்குள்ள நிலவரம் குறித்து பல்வேறு தகவல்கள் சென்றுள்ளதாம். குறிப்பாக, டி.எஸ்.எப் அணியை சார்ந்தவர்கள் வெற்றி பெற்றதாகவும், அவர்களுக்கு ஜெபம் செய்து ஆசி வழங்கிய தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் திடீரென அந்த தேர்தலை ரத்து செய்வதாகவும், மறுதேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெறுமென அறிவிப்பு வெளியிட்டிருந்தார். பேராயர் திடீர் மனமாற்றத்தின் காரணமென்ன என்பது குறித்தும், இதில் சினாட் விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும், திருமண்டல மக்கள் மத்தியில் கோரிக்கை பிரதம பேராயருக்கு சென்றது. அதன்படி சினாட் பொதுச்செயலாளர் ரத்தினராஜா பேராயருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளராம். அந்த கடிதத்தில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தலை ரத்து செய்வதற்கு அதிகாரமில்லை. தேர்தல் குறித்த புகார்களை சினாட்டில் தெரிவித்துதான் தீர்வு காண வேண்டும். எனவே பேராயர் தன்னிச்சையாக அறிவித்ததை திரும்ப பெற்று அதை அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
சினாட்டில் இருந்து இந்த கடிதம் வந்த பிறகு பேராயர் சமாதானத்தோடு வெற்றி பெற்ற அணியினரோடு இணைந்து செயல்படுவார் என்று திருச்சபை மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அதற்கு எதிர்மாறாக புதிய நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட ஸ்தோத்திர பண்டிகை நிகழ்ச்சி பணிகள் நடந்து வந்த நிலையில் அந்த கூட்டத்தில் பங்கேற்காமல் பேராயர் ஸ்தோத்திர பண்டிக்கை மற்றொரு தினத்தில் நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது சபை மக்களை மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. ஆனால், புதிய நிர்வாகிகள் அறிவித்த 25ம் தேதியில் ஸ்தோத்திர பண்டிகையை கோலாகலமாக நடத்தினர். பின்னர் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் அந்நிகழ்ச்சியில் வழங்கினர்.
அதன் பின்னராவது, பேராயர் தனது அலுவலகத்திற்கு வந்து பணியை துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதுவும், தற்போது வரை நடைபெறவில்லை. தொடர்ந்து நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்து வந்ததால், மீண்டும் பிரதம பேராயரின் கவனத்திற்கு இங்கு நடைபெறும் விசயம் எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து விசாரித்த பிரதம பேராயர் (மாடரேட்டர்) தர்மராஜ் ரசலம் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் தேவ சகாயத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் கூறியிருந்ததாவது: புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டவுடன், பழைய நிர்வாக கமிட்டி செயல்பட அதிகாரம் இல்லை என்பதை அறியாமல் நவம்பர் 3ம் தேதி மறுதேர்தல் நடத்துவற்கு முடிவு எடுக்கப்பட்டதாக பேராயர் கூறியுள்ளார். இதன் மூலம் பொதுச்செயலாளர் கூறிய குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்காக தவறான முடிவை நியாயப்படுத்தும் நோக்கில் ஒரு பக்கமாக நின்று செயல்பட்டுள்ளது தெரிகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமண்டல நிர்வாகிகள் மட்டுமே திருமண்டலத்தை நிர்வகிக்க பொறுப்புடையவர்கள். வங்கி பரிவர்த்தனைகளை செய்ய திருமண்டல பொருளாளர் உபத்தலைவர் அல்லது குருத்துவச் செயலர் இணைந்து செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் நவம்பர் 3ம் தேதி நடக்கவிருக்கும் தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது. மேற்கண்ட அனைத்தும் சிஎஸ்ஐ அரசியல் அமைப்பு சட்டப்படி தவறுகள் மற்றும் விதிமீறல்கள் ஆகும். இப்படி செயல்பாட்டிலிருந்து பேராயர் தன்னை விலக்கிக் கொண்டு தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்ற இசைவு தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முரண்பாடாகவும், சிஎஸ்ஐ சட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்டால், முன்னறிவிப்பு இன்றி எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கைக்கு கட்டுப்பட வேண்டும். இவ்வாறு பிரதம பேராயர் அதிரடி அறிவிப்பை அறிவித்தார். இந்த அறிவிப்பு திருமண்டல வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலில் சினாட் பொதுச்செயலாளர் அனுப்பிய கடிதம் வரப்பட்ட நிலையில் அந்த உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட பேராயர், இரண்டாவதாக பிரதம பேராயரே எழுதிய கடிதம் வரப்பட்டவுடன் ஒரு சுமுகமாக முடிவுக்கு வந்து புதிய நிர்வாகிகளோடு செயல்படுவார் என்ற நிலையில் திருமண்டல மக்கள் எதிர்பார்த்த நிலையில் அதுவும் ஏமாற்றமாக அமைந்தது.
காரணம் புதிய நிர்வாக கமிட்டியினரால் இன்று 30.10.2021 சனிக்கிழமை காலை 10 மணிக்கு திருமண்டலம் முழுவதும் உள்ள குருமார்கள் அடங்கிய கூட்டம் வட்டக்கோயில் எபனேசர் ஆலயத்தில் நடைபெற்றது.
அதற்கு போட்டியாக, பிரதம பேராயரின் உத்தரவு வந்த நிலையில் அதையும் மீறி, தூத்துக்குடி-நாசரேத் திருமண்;டல பேராயர் தேவசகாயம் திருமண்டல குருமார்கள் அடங்கிய கூட்டத்தை சண்முகபுரம் தூய.பேதுரு ஆலயத்தில் அதே தினமான 30.10.2021 நடைபெறுவதாக அறிவிப்பு செய்திருந்தனர்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே குருமார்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவசரகதியாக, இன்று திடீரென போட்டி கூட்டமாக பேராயர் தேவசகாயம், அதே தினத்தில் குருமார்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது, திருமண்டல சபையார் மத்தியிலும், குருமார்கள் மத்தியிலும்; அதிர்ச்சியையும், இன்னும் பிரதம பேராயரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, பேராயர் நடக்கவில்லையோ என்ற வினாவும் எழுந்துள்ளது.
இந்தநிலையில் இன்று காலை திருமண்டல குருமார்கள் கூட்டம் வட்டக்கோவிலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு புதிய நிர்வாகிகளுக்கு முதல் கூட்டம் என்பதால், குருமார்கள் அழைத்ததின் பேரில் புதிய நிர்வாகிகளான லே செயலாளர் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், உபதலைவர் குருவானவர் தமிழ்செல்வன், குருத்துவசெயலாளர் இம்மானுவேல் வான்ஸ்றக் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதம பேராயரின் உத்தரவை மதித்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அதேபோல் சண்முகபுரம் ஆலயத்தில் பேராயர் தேவசகாயம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்; சுமார் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த போட்டி கூட்டம் சபை மக்கள் மத்தியில் மனவருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரதம பேராயரின் உத்தரவிற்கு பேராயர் தேவசகாயம் மதிப்பளிக்கவில்லையே என்ற பேச்சு திருமண்டல மக்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட உச்சக்கட்ட குழப்பத்திற்கு தீர்வு எப்போது? என்கின்றனர் திருமண்டல மக்கள்.

