தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்; பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பி காணப்படுகிறது. தற்போது பெய்து வரும் கனமழையால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி வரும் நிலையில், தூத்துக்குடி எம்.பி கனிமொழியின் அதிரடி நடவடிக்கையால் மழைநீரை உடனுக்குடன் அகற்றும் பணி கனஜோராக நடைபெற்று வருகிறது.
கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டால் தூத்துக்குடி கதி அதோகதி தான். குறிப்பாக, மாநகராட்சி மூலம் பல மின்மோட்டார்கள் பொருத்தி மழைநீர் வெளியேற்றியதாகவும், ஒரு மணி நேரத்திற்கு மின் மோட்டார் ஓடினால் ஒரு தொகை என விலை நிர்ணயித்து இரவு-பகல் மின்மோட்டார் ஓடியதாக ஒரு மெகா ஊழல் கடந்த ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் பழுதடைந்த மின் மோட்டார்களை மழைநீர் தேங்கிய இடங்களில் வைத்து, இந்த மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணி நடந்ததாக பகல்கொள்ளையாக கணக்கு காட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மழைகாலங்கள் வந்து விட்டால் மாநகராட்சிக்கு ஒரே குஷி தான். காரணம் மழைநீரை வெளியே அகற்றுவதாக கூறி பல லட்சம் மாநகராட்சி மூலம் பில் போட்டது தான் மிச்சம். மழைநீர் தேங்கிய பகுதிகளில் மழைநீரை விரைவாக அகற்றுவதற்கோ, வடிகால் அமைப்பதற்கோ, எதிர்காலத்தில் மழைநீர் தேங்காத வண்ணம் எந்தவித திட்டமோ, நடவடிக்கையோ மாநகராட்சியிடம் இல்லை. குறிப்பாக, காமராஜ் கல்லூரி அருகில், தூத்துக்குடி தெற்கு காவல்நிலையம் அருகே பல ஆண்டுகளாக மழைநீர் தேங்கி வந்த நிலையில், நீதிமன்றம் தலையிட்டதன் பேரில் உயரமான சாலை அமைக்கப்பட்டதால், தற்போது மழைநீர் சிறிதும் தேங்குவதில்லை. நீதிமன்ற தலையீடு இல்லாத பல இடங்கள் இன்னும் கேட்பாரற்ற நிலையில் இருந்து வருகிறது.
பேரிடர் காலத்தில் நடைபெறும் பணிகளை காரணம் காட்டி கடந்த ஆட்சியில் மாநகராட்சியில் பணிபுரியும் ஒருசில அதிகாரிகளின் துணையோடு முறைகேடாக பில் போடப்பட்டு பல லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மழைநீர் அகற்றும் பணி மந்தநிலையில் நடைபெற்றது.
தற்போது புதிய அரசு அமைந்த பிறகு, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு உட்பட மக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காரணம், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளையும் வரவழைத்து ஆலோசனை நடத்தி மக்கள் பிரச்சனைக்கு உடனுக்குடன் தீர்வு காணவேண்டுமென அறிவுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த இருதினங்களாக பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி வருகிறது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் கனிமொழி எம்பி திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று (30.10.2021) தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட செல்வநாயகபுரம், டிஎஸ்எப் கார்னர், லூர்தம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் மூலம் அகற்றும் பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் மழைநீரை அகற்ற ஏதுவாக ராட்சத இயந்திரங்களை கொண்டு அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டும் தனியார் ஆலைகளை தொடர்பு கொண்டும் தெரிவித்தார்.
பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு எதிர்பாராத அளவுக்கு நேற்றைய தினம் மட்டும் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்தது. ஓட்டப்பிடாரம், காயல்பட்டிணம், திருவைகுண்டம், தூத்துக்குடி மாநகராட்சி ஆகிய பகுதிகளில் அதிக அளவு மழை பெய்தது. இதன் காரணமாக மாநகராட்சி பகுதிகளில் ஒரு சில பகுதியில் சாலைகள் தண்ணீர் தேங்கியுள்ளது. தண்ணீரை அகற்றுவதற்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. மாநகராட்சியில் 200 மோட்டார் தயாராக உள்ளது. தற்பொழுது 50 இடங்களில் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. 17 இடங்களில் மோட்டார்களுக்கு அறை கட்டப்பட்டுள்ளது.

எனவே இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் சாலைகளில் தண்ணீரை தேங்காமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மழையின் காரணமாக சாலையில் செல்லும்பொழுது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் பேருந்துகள் மாணவர்களை அழைத்து செல்லும்போது அழைத்து சென்று பத்திரமாக திரும்ப வேண்டும். வரும் காலங்களில் மழை தண்ணீர் சாலைகளில் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வில் செயற்பொறியாளர் சுரேஷ் ரூபன், உதவி செயற்பொறியாளர் சரவணன், முக்கிய பிரமுகர்கள் ஜெகன்பெரியசாமி, ஆனந்தசேகரன் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி எம்.பி கனிமொழி மக்களின் பிரச்சனையை நேரடியாக சென்று பார்வையிட்டு அதற்கு தீர்வு கண்டு வருகிறார். கடந்த ஆட்சியில் மழைநீரை அகற்றும் பணியில் மெத்தன போக்கு காட்டி பல மின்மோட்டர் பொறுத்தியதாக கணக்கு காட்டி மாநகராட்சியில் போலி பில் போட்ட நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, கனிமொழி எம்.பி-யின் ஆலோசனையின் பேரில் அனைத்து அதிகாரிகளும் பம்பரமாக சுழன்று மழைநீரை அகற்றும் பணியில் எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் ஈடுபட்டு வருவதால், இந்தாண்டு தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீரால் எந்தவித இடையூறும் இருக்காது என்று பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி தொகுப்பு: சக்திவேல்

