தூத்துக்குடி மாவட்டத்தை பசுமையாக மாற்ற வேண்டும் என்றால் அதிகமான மரங்கள் வளர்க்க வேண்டும். அதிக மரங்கள் நட்டு வளர்க்கும் பஞ்சாயத்துகளுக்கு பரிசு தரப்படும் என கனிமொழி எம்பி பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் இரட்டை திருப்பதியில் 66 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மரக்கன்று வழங்கும் விழாவினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் .கனிமொழி கருணாநிதி இன்று (30.10.2021) கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசியதாவது: சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு பல தொண்டுகளை ஆற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அதில் முக்கியமாக பெண்கள் தற்சார்பு அவர்களுக்கு சுய தொழில்களை கற்றுக்கொடுத்து அதன் மூலம் தங்கள் சொந்த காலில் நிற்கக் கூடியவர்களாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதுபோல் நீர் நிலைகளை சரிசெய்வதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் 66 ஊராட்சிகளுக்கும் சுமார் 10000 மரக்கன்றுகளை வழங்கியுள்ளார்கள்.
மரக்கன்றுகளை நடுவதுடன் வேலை முடிந்து விடாது மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றி பாதுகாத்து, பராமரித்து அது நன்கு வளரும் வரை நாம் அதற்கு பாதுகாப்பாக இருந்தால்தான் வரும் காலங்களில் நமக்கு மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையினருக்கும் அந்த மரம் பாதுகாப்பாக இருக்கும். மரம் வளர்ப்பதன் மூலம் மழை பெய்யும்பொழுது தண்ணீர் மட்டம் உயரும். ஏரி, குளங்களை பாதுகாக்க வேண்டும். அனைவரும் முடிந்த அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். பூமியின் அதிகரித்துக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை பசுமையாக மாற்ற வேண்டும் என்றால் அதிகமான மரங்கள் வளர்க்க வேண்டும். அடுத்த வருடத்திற்குள் எந்த பஞ்சாயத்தில் அதிக மரங்கள் நட்டு வளர்க்கின்றார்களோ அந்த நபர்களுக்கு நிச்சயமாக பரிசு தரப்படும். பஞ்சாயத்து தலைவர் தங்கள் பகுதியில் வசிக்கும் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா என கண்டறிந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வைக்க வேண்டும். கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடர்ந்து தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் கண்ணன், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை கள இயக்குநர் ஜெயக்குமார், நிதி இயக்குநர் இன்டர்ஸ்நாக் கேஷீவ் இந்தியா பிரவேட் லிமிடெட் ராமபிரியன், நிர்வாக இயக்குநர் இன்டர்ஸ்நாக் கேஷீவ் இந்தியா பிரவேட் லிமிடெட் ஜீர்கன் வேன் ஓர்ஸ்காட், ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் சிவகாமி வைகுண்ட பாண்டியன், முக்கிய பிரமுகர் ஜெகன்பெரியசாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

