நாகை மாவட்டத்தில் உள்ள உரம் விற்பனை மையங்களில்
நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் ஆய்வு
வேதாரண்யம் அக் 28
நாகப்பட்டினம் மாவட்டம் பரவை கிராமத்தில் உள்ள உரம் விற்பனை மையங்களில் மாவட்டஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம் பரவை கிராமத்தில் உள்ள வி.பி.வி ஏஜென்சீஸ், அன்னை ஏஜென்சீஸ் ஆகிய உரம் விற்பனை மையங்களில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் திடீர் ஆய்வுமேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
இந்தஆய்வின் போது உர இருப்புபதிவேட்டில் உள்ள உர இருப்புக்கும், விற்பனை முனைய கருவியில் உள்ள இருப்புக்கும் வேறுபாடுகள் உள்ளதா? பட்டியல் படிஉரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்த பின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சில்லறை உர விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட தொகையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, உர உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்பது, அனுமதி பெறப்படாத கிடங்குகளில் உரங்களை இருப்பு வைத்திருப்பது போன்றவை கண்டறியப்பட்டால் அவர்களது உர உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், உர விற்பனையாளர்கள் தங்களது கடைகளில் விலைப்பட்டியல் அடங்கிய விவரப் பலகையை பார்வையில் படும்படி வைக்க வேண்டும். உரம் வாங்கவரும் விவசாயிகளுக்கு பிற தேவையற்ற இடுபொருட்களை கட்டாயத்தின் பேரில் விற்பனை செய்யக் கூடாது. உர மூட்டைகளின் எடையை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், விவசாயிகள் உரங்கள் மற்றும் அதன் தொடர்பாக புகார்களை 7397671300 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தெரிவித்திடவும் தேவைக்கேற்ப உரங்களை வாங்கி பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) குமரன், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் தனபால் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

