தமிழக இந்து அறநிலையத்துறையின் கீழ் நிறைய உள்ள கல்விநிலையங்கள் இயங்கி வருகின்றன. அதில் பணியாற்ற புதிதாக பணியாளர்கள் நியமனம் நடக்க இருக்கிறது.
அந்த வகையில் சென்னை கொளத்தூரில் இயங்கும் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், காவலர், தூய்மைப்பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த அக்.,13ல் விளம்பரம் வெளியிட்டது. அந்த விளம்பரத்தில், சம்பந்தப்பட்ட பணிகளுக்கு ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற மதத்தினர் யாரும் கலந்து கொள்ள தகுதி இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து சென்னையை சேர்ந்த சுஹைல் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ’’ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது, இந்திய அரசியல் சட்டப்பிரிவு 16 மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. இந்த அறிவிப்பாணையை ரத்து செய்துவிட்டு எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிட ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ’’பணி நியமன நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், ஹிந்து அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தப்படும் கல்லூரிகளில் ஹிந்துக்கள் மட்டுமே நியமிக்க முடியும். ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ஹிந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று விதி உள்ளது’’ என்று அரசின் நிலைபாட்டை தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கு குறித்து தமிழக அரசும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் விளக்கம் இந்து மத மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.

