தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல்: டி.எஸ்.எப். அணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நாசரேத்தில் அக்.20 ஆம் தேதி நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் நாசரேத் மர்காஷிஸ் கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள சிற்றாலயத்தில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பிஷப் தேவசகாயம் தலைமையில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது. பின்னர் மர்காஷிஸ் கலைக்கல்லூரி கலை அரங்கத்தில் காலை 9 மணி அளவில் தொடங்கிய வாக்களிக்கும் பணி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் டி.எஸ்.எப். மற்றும் எஸ்.டி.கே ராஜன் என 2 அணிகளாக போட்டியிட்டனர். வாக்குகள் எண்ணும் பணி மாலை 6 மணியளவில் தொடங்கியது. பின்னர் முடிவுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டது.
இத்தேர்தலில் டி.எஸ். எப். அணி சார்பில் போட்டியிட்ட உப- தலைவர் வேட்பாளர் குருவானவர் தமிழ்ச்செல்வன், லே செயலாளர் வேட்பாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், குருத்துவ காரியதரிசி வேட்பாளர் இம்மானுவேல் வான்ஸ் டாக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.


தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல லே செயலாளராக கிப்சன் மற்றும் அவரது அணியை சார்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், டி.எஸ்.எப் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த வெற்றியானது, தென்னிந்திய திருச்சபையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும், குருவானவர்களுக்கு மரியாதையும், உரிய அங்கீகாரமும் அளிக்கப்படும் என்றும் திருச்சபை மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே நிர்வாகத்தில் இருந்த அணியை சார்ந்தவர்கள் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல திருச்சபை மக்களின் வாக்குரிமையை பலருக்கு பறித்ததால் ஏற்பட்ட அநீதிக்கு தற்போது நீதி கிடைத்துள்ளதாகவும், டிஎஸ்எப் ஆதரவாளர்கள் மற்றும் திருச்சபை மக்கள் தெரிவிக்கின்றனர். நாசரேத் மெஞ்ஞானபுரம், தங்கம்மாள்புரம் போன்ற பகுதிகளில் மட்டுமே 1000க்கு மேற்பட்ட திருச்சபை மக்களின் வாக்குரிமையை பறித்ததாக கூறப்படுகிறது. திருச்சபை மக்களின் கருத்துக்களை மதிக்காமல் தன்னிச்சையாக சில முடிவுகள் எடுத்ததே எஸ்.டி.கே.ராஜன் அணியினரின் தோல்விக்கு காரணம் என திருச்சபை மக்கள் பேசிவருகின்றனர். அதே நேரத்தில் டிஎஸ்எப் அணியை சார்ந்தவர்கள் திருச்சபை மக்களின் கருத்துக்களையும் அவர்களின் குறைகளை கேட்டறிவதற்கு 3 மாதத்திற்கு ஒரு குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுவதாகவும், குருவானவர்களுக்கு மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் திருச்சபை சார்பில் மருத்துவ கல்லூரி அமைக்க பாடுபடுவோம், கல்வி, ஊழியம், ஆலய பணி ஆகியவற்றிற்கு திருச்சபை மக்களின் ஆதரவோடு திறம்பட ஒற்றுமையுடன் செயல்படுவோம் என டிஎஸ்எப் அணியை சார்ந்தவர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்ததே வெற்றிக்கு பெரிதும் காரணமாக அமைந்தது என திருச்சபை தெரிவித்தனர். மாற்றம் தேவை என கிறிஸ்தவர்கள் இந்த முறை முடிவு செய்ததால் டிஎஸ்எப் அணிக்கு ஆதரவு பெருகியது. டிஎஸ்எப் அணியில் இருந்த முன்னாள் லே செயலாளர் மோகன், வட்டக்கோயில் ஜான்சன், டிஎஸ்எப் பிரேம், பேட்ரிக் ஆலய முக்கிய நிர்வாகி இன்ஸ்டின், ஜெயக்குமார் ரூபன், நாசரேத் நிக்சன், சாயர்புரம் பெருமன்ற உறுப்பினர் ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமோனோர் ஒன்றுமையுடன் இணைந்து திருச்சபை மீட்டெடுக்கப்பட வேண்டும் அதற்கு திருச்சபை மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என தேர்தல் பணியாற்றினர்.
பொருளாளர் பதவி, திருமண்டல செயற்குழு உறுப்பினர் மற்றும் துணைக்குழுக்கள் ஆகிய பதவிகளுக்கு விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரியவருகிறது. நாசரேத் பேராலயத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சாத்தான்குளம் டிஎஸ்பி மற்றும் நாசரேத் காவல் ஆய்வாளர் விஜயலெட்சுமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு பணியை பலப்படுத்தினர்.

