எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று விசாரணை – சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் எதிரி கைது – உடனே கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரகிரி புதூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் சூரிய ராகவன் (31) என்பவர் எட்டையாபுரம் நடுவிற்பட்டி பகுதியில் அவரது உறவினரின் எல்க்ட்ரிக்கல் கடையில் டி.வி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரை மேற்படி டி.வி மெக்கானிக் கடையில் வைத்து இன்று (20.10.2021) மர்ம நபர் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூரிய ராகவன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜின்னா பீர்முகம்மது தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. பொன்ராஜ், முதல் நிலை காவலர் திரு. பாண்டியராஜ் மற்றும் காவலர் திரு. முனீஸ்வரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின்படி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் படர்ந்தபுளி பகுதியை சேர்ந்த 21வயது பெண் ஒருவரை கொலையுண்ட சூரிய ராகவன் (31) கடந்த 2 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்திற்கு முன்பு சோழபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் ஆனந்தராஜ் (22) என்பவர் சூரிய ராகவனின் மனைவியான மேற்படி பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். தான் ஒருதலையாக காதலித்த பெண்ணை சூரிய ராகவன் திருமண செய்து கொண்டதால், அவர் மீது ஆத்திமடைந்த மேற்படி ஆனந்தராஜ், அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து இன்று (20.10.2021) நடுவிற்பட்டி பகுதியில் உள்ள சூரிய ராகவன் வேலை செய்யும் கடைக்கு சென்று அவரிடம் தகராறு செய்து, அவரை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. உடனே மேற்படி தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி மேற்படி எதிரி ஆனந்தராஜை கைது செய்து, அவரிடமிருந்த 2 கத்திகளை பறிமுதல் செய்தனர்.

