தமிழகத்தில் இன்று 5 -வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதுவரை 4 கட்டமாக தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிவடைந்து உள்ளது. இதில் பல லட்சம் பேர் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 69 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். ஈரோட்டில் இன்று நடைபெறும் 5வது கட்ட தடுப்பூசி முகாமில் மொத்தம் 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் 900 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் 64 மையங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போடும் வகையில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி நாளை நடமாடும் தடுப்பூசி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 40 வாகனங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு மாநகர் பகுதியில் நாளை நடைபெறும் 5-வது கட்ட தடுப்பூசி முகாமில் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களுக்காக நாளை நடமாடும் தடுப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 40 ஆட்டோக்கள் இந்த தடுப்பூசி மையத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு ஆட்டோவிலும் தடுப்பூசி செலுத்த ஒரு நர்சும், ஒரு டேட்டா என்ட்ரி செய்பவர்களும் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொரு பகுதியாகச் சென்று அந்தப் பகுதியில் இதுவரை தடுப்பூசி செலுத்த கொள்ளாதவர்கள் விவரங்களை சேகரித்து அவர்கள் வீட்டுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுப்பார்கள். இது வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அவர்கள் வெளியே செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

