தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமமின்றி இயங்கும் உணவு வணிக நிறுவனங்கள் மூடப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் ச. மாரியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு உரிமம் இல்லாமலும், காலாவதியான உரிமத்துடனும் சில இடங்களில் ஹோட்டல், பேக்கரிகள், மளிகைக் கடைகள், விநியோகஸ்தா்கள், உப்பு வணிக நிறுவனங்கள் போன்றவை இயங்கி வருவதாக புகாா் எழுந்துள்ளது. அவற்றைக் கண்டறிந்து மூடப்படும் என உணவு பாதுகாப்புத் துறையால் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
எந்தவித வேறுபாடின்றியும் அனைத்து உணவு வணிகா்கள் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கையே எடுக்கப்படும். உத்தரவை மீறி நிறுவனங்கள் செயல்படும் பட்சத்தில் அந்த நிறுவனங்கள் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்களால் மூடப்படும். எனவே, அனைத்து உணவு வணிகா்களும் தங்கள் உணவு பாதுகாப்பு உரிமம் காலாவதியாகியிருந்தாலோ அல்லது உரிமமே இல்லாதிருந்தாலோ உடனடியாக புதிய உரிமத்திற்கு இணையத்தளத்தில் விண்ணப்பித்து, தங்கள் உணவு வணிகத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

