மதுரை ஆனையூர் அருகே உள்ளது எஸ்விபி நகர். இங்கு வசித்து வந்தவர் சக்திகண்ணன். இவர் இதே பகுதியில் சோப் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். மனைவி பெயர் காவியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார் சக்தி கண்ணன். இந்நிலையில் நேற்றிரவு பிள்ளைகள் இருவரும் கீழே உள்ள ரூமில் தூங்க சென்றனர்.
மாடியில் உள்ள ரூமில் தம்பதி இருவரும் இருவரும் நேற்று இரவு உறங்கியுள்ளனர். இன்று அதிகாலை அந்த ரூம் ஏசியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு புகை வெளிவர ஆரம்பித்துள்ளது.. சிறிது நேரத்தில் அந்த அறை முழுக்க புகை சூழ்ந்துவிட்டது. அந்த வீட்டின் மாடியில் இருந்து கரும்புகை வெளியே வந்திருப்பதை பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் பார்த்துள்ளனர்.
இதனால் கதவை தட்டி குழந்தைகளிடமும் விஷயத்தை சொல்ல, குழந்தைகளும் அந்த கரும்புகையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைவாக செயல்பட்டு மாடியில் உள்ள அந்த ரூம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சக்தி கண்ணன் மற்றும் அவரின் மனைவி 2 பேருமே தீயில் கருகி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
புகை வந்த உடனேயே தம்பதி இருவரும் கதவை திறந்து வெளிவர முயன்றுள்ளனர்.. ஆனால், எவ்வளவோ முயற்சித்தும் அவர்களால் தப்பிக்க முடியாமல், அவர்கள் உடம்பிலும் தீ பற்றி எரிந்துள்ளது. கதவை பூட்டியிருந்ததால், அவர்களின் அலறல் சத்தம் வெளியில் கேட்கவில்லை. இதனால் தீயிலேயே கருகியுள்ளதாக கூறப்படுகிறது.. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து உடல்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கூடல்புதூர் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

