என்னை கருணை கொலை செய்யுங்கள்… என்னை கருணை கொலை செய்யுங்கள் என மாற்றுத்திறனாளி ஒருவர் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பார்ப்பவர்கள் நெஞ்சை பதற வைக்கிறது.
சென்னை, மதுரவாயல் தாலுகா, போரூரில் வசிக்கும் ஜே.ரேணு என்பவர் மாற்றுத்திறனாளியாக உள்ளார். இவருக்கு 20வயதில் இருந்து தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு கை, கால்களும் செயல் இழந்தவர். இவரின் மாற்றுதிறனாளி ஊனத்தின் 90 சதவீதம் ஆகும்.
தனக்கு 44 வயதாகியும் இதுவரை திருமணமாகாமல் தனியாக எந்தவொரு ஆதரவுமின்றி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறார். எனது குடும்பம் நல்ல வசதியான குடும்பம் என்றும், 30 வீடு வாடகைக்கு விட்டிருப்பதாகவும், சுமார் 5 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாகவும் அந்த வீடியோ பதிவில் கூறுகிறார்.
அம்மா மற்றும் 2 அண்ணன்கள், 1 தம்பி ஆகியோர் இருந்தும், தன்னை யாரும் கவனிப்பதில்லையாம். உணவு, பராமரிப்பு மற்றும் மருத்துவ உதவி செய்யுங்கள் என தன் அம்மாவிடம் கேட்டதற்கு, பெற்றதாயே ஊனத்தை குறைச்சொல்லி, உடன்பிறந்த சகோதரர்கள் மூலம் அடித்து சித்ரவதை செய்யப்பட்டு வருவதாக வருந்துகிறார்.
இதுகுறித்து அவர் பலமுறை காவல்துறையில் புகார் தெரிவித்தும் எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், எனது உயிருக்கும் எனது வாழ்வாதாரத்திற்கும் நான் வாழ மறுவாழ்வு செய்து தருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்; தாழ்மையான வேண்டுகோள் வைக்கிறேன். ஐயா, உயர்வாழ வழிவகை செய்யுங்கள், இல்லையெனில் கருணை கொலை செய்துவிடுங்கள், கருணை கொலை செய்துவிடுங்கள் என கண்ணீர் மல்க பேசிய வீடியோ பதிவு பார்ப்போர் நெஞ்சை பதற செய்கிறது.
மாற்றுத்திறனாளியான ரேணு, தனது சொந்த தாய் மற்றும் உடன்பிறந்த சகோதரர்கள் மூன்று பேர்கள் இருந்தும், யாருடைய ஆதரவுமின்றி தனியாக கஷ்டப்பட்டு வருவதை, அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளியின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றன. அதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ உதவிகள், பராமரிப்பு மையங்கள் மற்றும் பல்வேறு சலுகைகளை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில் சென்னையை சார்ந்த கை, கால் செயலழிந்து 90 சதவீத ஊனத்தோடு, தனியாக வாழுந்து வரும், ரேணு என்ற மாற்றுத்திறனாளியின் மனவேதனைக்கும், மன குமுறலுக்கும் தீர்வு காணும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, மாற்றுத்திறனாளியின் மனவேதனைக்கு மருந்து போட வேண்டும் என பல்வேறு தரப்பினர்கள் இந்த வீடியோவை பார்த்து அரசுக்கு வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
போலீஸ் செய்தி இணையதள தொலைக்காட்சி வாயிலாகவும், மாற்றுத்திறனாளியின் வாழ்வில் விடிவு பிறக்க அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்.
செய்தி தொகுப்பு: ஆர்.ஆனந்த பாபு, சென்னை.

