வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி தலைமையில் நடந்தது. கூட்டத்தின்போது மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜவஹர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் கூடுதலான மழை கிடைத்துள்ளது. வரும் வடகிழக்கு பருவமழையால் இயல்பான மழை கிடைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இக்காலகட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது. அதனடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் மூத்த இந்திய ஆட்சி பணி அலுவலர்கள் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு, அவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள், தூர்வாருதல் 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள தூர்வாரும் பணிகள் ஒருவார காலத்திற்குள் முடிக்கப்பட்டுவிடும். இம்மாவட்டத்தில் உள்ள 12 புயல் பாதுகாப்பு மையங்களும், 5 பல்நோக்கு பேரிடர் மையங்களும் ஆய்வு செய்து அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 100 சமுதாயக் கூடமும், 73 திருமண மண்டபங்கள், 29 முன்னெச்சரிக்கை அறிவிப்பு மையங்கள் உள்ளன. 134 தாழ்வான பகுதிகள்; என கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஆபத்தான நிலையில் உள்ள பழமையான மரங்கள், கட்டிடங்கள் இருந்தால் அது குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு மையத்திற்கு தெரிவிக்கவும். அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், இம்மாவட்டத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 215 பெண் முதல்நிலை பொறுப்பாளர்கள், 2,366 ஆண் முதல்நிலை பொறுப்பாளர்கள் உள்ளனர். தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான மணல் மூட்டைகள், பாலிதின் பைகள், சவுக்கு குச்சிகள் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் 100 பாதுகாப்பான இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு துறை, காவல்துறை உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் 1077, என்ற தொலைபேசி எண்கள் இயங்கி வருகிறது. இக்கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இயற்கை பேரிடர் காலங்களில்; எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திரரெட்டி தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். துறைவாரியாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பணிகள் குறித்து தீயணைப்பு துறை, மாவட்ட வனக்காவல், காவல்துறை, நாகப்பட்டினம். வேதாரண்யம் நகராட்சி வேளாங்கண்ணி, கீழ்வேளுர், தலைஞாயிறு பேரூராட்சி போன்ற துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த மீட்பு உபகரணங்களை வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் வன உயிரினக்காப்பாளர் யோகேஷ் குமார் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி மற்றும் அனைத்து துறை அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தி தொகுப்பாளர்

