கடையநல்லூர் நகராட்சியில் ஆணையர், மேலாளர் உட்பட முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளதால் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திலேயே பெரிய நகராட்சியான கடையநல்லூர் நகராட்சி முதல் நிலை நகராட்சியாகும். இங்கு சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட், பஹ்ரைன், மஸ்கட், சிங்கபூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் பணி புரிந்து வருவதால் கடையநல்லூரை வெளியூர்வாசிகளால், குட்டி சிங்கபூர் என்று அழைக்கப்படுகிறது.
இந்திய நாட்டிற்கு அன்னிய செலவாணியை ஈட்டி தரும் நகரமாக கடையநல்லூர் விளங்கி வருவதுடன் பொருளாதாரத்திலும் தன்னிறைவு பெற்ற பகுதியாக விளங்கி வருகிறது. ஆனால் மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டிய நகராட்சி நிர்வாகம் சீர்கெட்டு போய் உள்ளதால் பொதுமக்கள் படும் அவதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தங்கள் பிரச்சனைகளை முறையிட நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் இல்லாததால் பொது மக்கள் பாடு கடும் திண்டாட்டமாகியுள்ளது. தற்போது இந்த நகராட்சியில் ஆணையர், மேலாளர் போன்ற முக்கிய பதவிகள் காலியாக உள்ளதால் மக்களின் குடிதண்ணீர், சுகாதாரம் உட்பட அடிப்படை பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2019 ஆண்டு இந்த நகராட்சியில் பணிபுரிந்த பவுன்ராஜ் மாற்றப்பட்ட நிலையில் நிலையில் நகராட்சியில் பொறியாளராக பணிபுரிந்த பொறியாளர் தங்கப்பாண்டியன் ஆணையர் பதவியையும் சேர்த்து கவனித்தார்.
இதை தொடர்ந்து செங்கோட்டையில் ஆணையராக பணி புரிந்த கிருஷ்ணமூர்த்தி கடையநல்லூர் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார். ஒரு சில மாதங்களில் அவரும் மாற்றப்பட பொறியாளர் தங்கப்பாண்டியன் மீண்டும் ஆணையர் பொறுப்பை சேர்த்து கவனித்தார். இந்நிலையில் பொறியாளர் தங்கப்பாண்டியனும் ராஜபாளையம் நகராட்சிக்கு பதவி உயர்வில் மாற்றப்பட கடையநல்லூர் நகராட்சியில் முக்கிய பதவிகளான ஆணையர் மற்றும் பொறியாளர் பதவிகள் காலியாகின. இதை தொடர்ந்து நகராட்சியில் சுகாதார அதிகாரியாக பணிபுரிந்து வரும் நாராயணன் ஆணையர் பதவியை கவனித்தார். பின்னர் புளியங்குடி நகராட்சி ஆணையராக இருந்த குமார்சிங் கடையநல்லூர் நகராட்சியை கூடுதல் பொறுப்பாக கவனித்தார்.
இந்நிலையில் கடையநல்லூர் நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர் நியமிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிகையை ஏற்று கடந்த ஜனவரி மாதம் தலைமை செயலகத்தில் பணி புரிந்த ரவிசந்திரன் கடையநல்லூர் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் சீரடைய துவங்கியது. ஆனால் அவர் பணியை ஏற்று 7 மாதமே ஆன நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென திருந்தங்கல் நகராட்சிக்கு மாற்றப்பட்டார். இவர் ஏன் வேறிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார் என்பது இன்னும் கேள்வி குறியாக வே இருந்து வருகிறது தொடர்ந்து இந்நகராட்சி ஆணையாளர் பதவி காலியாகியது. இதனை அடுத்து தென்காசி ஆணையாளர் பாரிஜான் கடையநல்லூர் நகராட்சியை கூடுதலாக கவனித்து வருகிறார். இவர் கூடுதல் பொறுப்பை கவனித்து வரும் வேளையில் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை செலுத்த வேண்டிய சொத்து வரி குடிநீர் வரியை இவர் பொறுப்பு ஏற்ற நாளிலிருந்தே கட்டி யாக வேண்டும் என வருவாய் பிரிவு பில் கலக்டர்கள் மூலம் பொதுமக்களிடம் வசூலிக்க சொல்கிறார். மாவட்ட மண்டல நிர்வாக இயக்குனர் அலுவலகம் கடையநல்லூர் நகராட்சியில் பொது நிதிசுரண்டப் படும் போது வேடிக்கை பார்த்து விட்டு இப்போது மக்களிடம் வசூல் செய்ய முயல்கின்றது வருவாயை க்கு உரிய விகிதத்தை தாண்டி பணி நியமனங்கள் .லட்சக் கணக்கில் பணபரிமாற்றத்துடன் நடந்தேறிய கூத்தை நினைத்தால் தலை சுத்துகிறது
இந்த அவல நிலையில் நகராட்சி ‘ நிர்வாகம்கொரானா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் போராடி வரும் நிலையில் கடையநல்லூர் நகராட்சி அதிகாரிகள் பல்வேறு காரணங்களுக்காக பந்தாடப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு எழுந்துள்ளது. கடையநல்லூர் நகராட்சி பகுதியில நிலவும் குடிநீர் பிரச்சனை, சுகாதார சீர்கேடு, தெருவிளக்கு பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளால் பொது மக்கள் படும் அவதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது மக்கள் தங்கள் குறையை யாரிடம் சொல்வதென புரியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின்பு நிலைமை சீரடையும் என்று காத்திருந்த கடையநல்லூர் நகராட்சி பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருவதாக பொதுமக்கள் குமுறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே கடையநல்லூர் நகராட்சிக்கு நிரந்தரமாக ஆணையாளர் நியமிக்கப்படாதததால் மக்கள் பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்காததோடு நகராட்சி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடும் நடைபெறுவதாக குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது.
எனவே பொதுமக்கள் நலன் கருதி கடையநல்லூர் நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர் நியமிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்பாக உள்ளது. ஆட்சி மாறியும் காட்சி மாறாத நிலைதான் கடையநல்லூர் நகராட்சியில் காணப்படுகிறது மக்களுக்கான ஆட்சி என்று பறைசாற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் நிரந்தர ஆணையாளர் நியமிக்கப்படுவாரா என்பதுதான பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

