மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் குறித்து யூடியூப்பில் அவதூறு பரப்பிய சவுக்கு சங்கரை கைது செய்யக்கோரி மும்பை தாராவியில் கன்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களுக்கு உலகம் முழுவதிலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வழிபாட்டு மன்றங்களும், சக்திபீடங்களும் இயங்கி வருகின்றன. இந்த வழிபாட்டு மன்றங்கள் மூலம் மருத்துவ முகாம்கள், பல்வேறு சமுதாய நலப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இந்த இயக்கத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த சவுக்கு சங்கர் (எ) சங்கர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களைப்பற்றியும், வழிபாட்டு முறைகளை பற்றியும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பதிவு செய்து கடந்த 30ம் தேதி ஆதன் தமிழ் என்ற யூடியூப்பில் பதிவேற்றியுள்ளார். இந்த பதிவில் உண்மைக்குப் புறம்பான பொய்யான தகவல்களையும், இயக்க வழிபாட்டு முறைகளை கிண்டல் செய்தும், ஏளனம் செய்யும் வகையில் பேசியுள்ளார்.
உலகம் முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான செவ்வாடை பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் மேற்படி பதிவு அமைந்துள்ளதால் இந்த பதிவை யூடியூப்பில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சவுக்கு சங்கரை கைது செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட யூடியூப் நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மும்பையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மும்பை தாராவி பி.எம்.பி.சி.காலனியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மும்பை மாவட்ட செயலாளர் எஸ்.இ.ராஜூ தலைமை வகித்தார். வேள்விக்குழு தலைவர் பிச்சம்மாள் முன்னிலை வகித்தார். பொருளாளர் எஸ்.எஸ்.சுந்தர், சக்தி மனிமேகலை மற்றும் ஏராளமான செவ்வாடை தொண்டர்கள் கலந்து கொண்டு சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும், யூடியூப்பில் இருந்து மேற்படி பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.
தொடர்ந்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதே போன்று மும்பை தாராவி சீனியர் சிட்டி இன்ஸ்பெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். பத்திரிக்கையாளர் போர்வையில் யூடியூப்பில் பேசி பதிவு செய்த சவுக்கு சங்கருக்கு உலகம் முழுவதில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

