தூத்துக்குடி ரேசன் கடைகளில் துணிகர தில்லுமுல்லு – பாமாயில், சர்க்கரை வாங்கினால் அரிசி வாங்கியதாக குறுஞ்செய்தி – பொதுமக்கள் அதிர்ச்சி – மாவட்ட ஆட்சியர் விசாரணை குழு அமைப்பாரா?
முன்பெல்லாம் நியாயவிலைக் கடைகளில் இரு வழிகளில் அதிகமாக முறைகேடுகள் நடந்தன. ஒருபுறம், ஏராளமான குடும்ப அட்டைகளைச் சிலர் எடுத்து வந்து மொத்தமாக அரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றை வாங்கி வெளிச்சந்தையில் விற்று வந்தனர். மறுபுறம் நியாய விலைக் கடை ஊழியரே பலரது குடும்ப அட்டைகளில் பொருட்கள் வாங்கியதாகப் பதிவிட்டு அப்பொருட்களை கள்ளச்சந்தையில் விற்று முறைகேட்டில் ஈடுபட்டு வந்தனர்.
ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு மேற்கண்ட முறைகேடுகள் கணிசமாகக் குறைந்துவிட்டதாக உணவுத் துறை அதிகாரிகள் கூறினாலும், நியாய விலைக் கடைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில முறைகேடுகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உணவு கடத்தல் பிரிவு போலீசாரும், பறக்கும்படை தாசில்தார் தலைமையிலான குழு ரேசன் அரிசி கடத்தல் கும்பல்களை விரட்டி விரட்டி பிடித்தாலும், ரேசன் அரிசி கடத்தல் குறைந்தபாடில்லை. இதற்கு காரணம் ரேசன் கடை ஊழியர்களே கடத்தல் கும்பல்களுடன் கூட்டணி அமைத்து, பொருட்கள் வாங்க வரும் அப்பாவி மக்களின் குடும்ப அட்டையில் பொருட்கள் வாங்கியதாக வரவு வைத்து வருகின்றனர்.
மத்திய அரசு சார்பில் இந்தியா முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை-எளிய குடும்ப அட்டைதாரர்களுக்கு (PH-AYY) ஒருநபருக்கு 5 கிலோ அரிசி வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை குடும்ப அட்டைதாரருக்கு வழங்கப்படாமல், அவர்கள் அரிசி வாங்கியதாக முறைகேடாக பதிவேட்டில் பதிவு செய்து விடுகிறார்கள். வாங்கிய பொருட்கள் என்னெ;ன என்பதை குடும்ப அட்டைதாரர்கள் செல்போனுக்கு குறுஞ்செய்தி வருவது வழக்கம். சர்க்கரை மற்றும் பாமாயில் வாங்கிச்சென்றவர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் அரிசி மற்றும் மாநில அரசு வழங்கும் அரிசி வாங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறதாம்.
வாங்காத பொருட்களும் சேர்த்து வாங்கியதாக குறுஞ்செய்தியில் வரும் தகவல்களை கண்டு குடும்பஅட்டைதாரர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய்விடுகின்றனர். ஒரு குடும்ப அட்டையில் மட்டுமே சுமார் 50 கிலோ அரிசி கொள்ளையடிக்கப்படுகிறது என்றால், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து பல லட்சம் கிலோ அரிசி கொள்ளையடிக்கப்படுவது வேதனை. இப்படியாக, பொதுமக்களிடமிருந்து முறைகேடாக கணக்கு காட்டப்படும் அரிசி தான் வெளிச்சந்தைகளில் மூடை மூடையாக கடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
சமீபத்தில், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையின் கீழ் செயல்படும் சிவந்தாகுளம் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையத்தில் துணை பதிவாளர் திடீரென ஆய்வு செய்ததில், மண்ணெண்ணெய் வாங்காத குடும்பஅட்டைதாரர்களுக்கு வாங்கியதாக பதிவிட்டு, மண்ணெண்ணெய் நிலையத்தில் இருப்பு அதிகமாக இருந்ததால், பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதுபோல், தூத்துக்குடி குமாரர் தெரு, வரதராஜபுரம் ஆகிய இரண்டு ரேசன் கடைக்கும் எடையாளர் பணியில் இருக்கும் ஒருநபர் இரண்டு கடைக்கும் சேர்த்து விற்பனையாளராக செயல்பட்டு வருகிறார். இவர், அரிசி வாங்காத ரேசன் கார்டுகளுக்கு, பொருட்கள் வாங்கியதாக பதிவு செய்து, குறுஞ்செய்தி அனுப்பி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து வட்டாட்சியருக்கு பிரபல கட்சி பிரமுகர்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால், செய்வதறியாது முணுமுணுக்கின்றனர்.
எடையாளர் ஒருவரே இரண்டு ரேசன் கடைகளுக்கும்; சேர்த்து விற்பனையாளராக நியமித்ததே அரசு விதிமீறல்களுக்கு அப்பாற்பட்டது. இந்த சூழல்நிலையில் தான் இதுபோன்ற முறைகேடுகள் வரதராஜபுரம் மற்றும் குமாரர் தெரு கடைகளில் நடைபெற்றுவருதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுபோல் தூத்துக்குடி மாவட்டங்களில் பல கடைகளில் பல குடும்பஅட்டைதாரர்களிடம் அரிசி பெற்றுள்ளதாக குறுஞ்செய்தி தகவல் அனுப்பி, அந்த அரிசி மூட்டைகளை கடத்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

ரேசன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள், தில்லுமுல்லுகளை ஒழிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ஒரு குழு அமைத்து, குடும்ப அட்டை தாரர்களிடம் திடீர் ஆய்வு மேற்கொண்டு அவர்கள் என்னென்ன பொருட்கள் வாங்கியுள்ளார்கள் என்பதை அவர்களிடமே ஒப்புதல் வாக்குமூலம் பெற்றால் பல உண்மைகள் வெளிவரும்.
ரேசன் பொருட்கள் பெற்றுள்ளதாக வரும் குறுஞ்செய்தி தகவல்களின் உண்மைத்தன்மையை அறிய குழு அமைத்து விசாரணை நடத்தினால், ஏழை-எளிய பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் அத்தியாவசிய பொருளான அரிசி கடத்தப்படுவது தடுக்கப்படும். தூத்துக்குடி மேலரங்கநாதபுரம், கீழரங்கநாதபுரம் பொதுமக்களும் இதுபோன்று அரிசி வாங்கியதாக குறுஞ்செய்தி வருவதாக கூறி விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிவில் சப்ளை தாசில்தாரிடம் மனு அளித்தும் விற்பனையாளர் மீதான நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதாம்.
மாவட்ட ஆட்சியர் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் ரேசன் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, ரேசன் அரிசி கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
செய்தி: நமது சிறப்பு செய்தியாளர்.

