தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து துளசி சமூக அறக்கட்டளை நிறுவனர் தனலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தூத்துக்குடியில் 1990 ஆண்டுகளின் தொடக்கத்திலிருந்தே துளசி சமூக அறக்கட்டளை நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறேன். ஸ்டெர்லைட் ஆலை மூலமாக பெண்களுக்கு பல உதவிகள் கிடைத்து வருகிறது. அதன் அடிப்படையில் மூடியிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் நாங்கள் மனு அளித்து இருந்தோம்.
அதுகுறித்து எங்களில் சில பேர் பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்திருந்தனர். இதை விரும்பாத ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பேட்டியளித்த பெண்ணின் வீட்டிற்கே சென்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்த அவர் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார். தூத்துக்குடி என்றாலே ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றதொரு நிலைமையை அவர்கள் உருவாக்கி வருகிறார்கள். ஆதரவாளர்களுக்கென்று எந்த பாதுகாப்பும் இல்லாத சூழல் உள்ளது. தூத்துக்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு பெண்தான்.
இந்த சூழலில் பெண் ஒருவருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் இந்த சமூகத்தில் எங்களுக்கு பாதுகாப்பு நிலை என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கருத்தை கேட்பதுபோல ஆதரவாளர்கள் எங்களது கோரிக்கைகளையும் இந்த அரசு கேட்க வேண்டும். தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேட்டியளித்த பெண்ணை வீட்டிற்கே சென்று மிரட்டியது குறித்தும், இதுபோன்று ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மீது தொடரும் அராஜக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளோம் என்றார்.

