உணவு தாமதமானதால் ஓட்டல் சூறை போதை போலீசார் 2 பேர் சஸ்பெண்ட்!!
எஸ்.பி., ரவளிப்ரியா அதிரடி நடவடிக்கை
———
ஆப்பாயில்’ வர தாமதமானதால் போதையில் ஓட்டலை சூறையாடிய இரு போலீசார், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை ரோட்டில் ராம்குமார், 39 என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த, 6ம் தேதி இரவு 10:00 மணிக்கு, தஞ்சாவூர் ஆயுதப்படை ஏட்டு பாலசுப்ரமணியன், 45, அவரது நண்பர்கள் திருவிடைமருதுார் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ்காரர் அருண்குமார், 30 மற்றும் எலக்ட்ரீஷியன் விஜி, 35 ஆகியோர் சாப்பிட்டுள்ளனர். போதையில் இருந்த மூவரும், ஆப்பாயில் கேட்டுள்ளனர்.
ஓட்டலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஆப்பாயில் வழங்க தாமதமானது.ஆத்திரமடைந்த பாலசுப்ரமணியன், அவரது நண்பர்கள் சப்ளை செய்து கொண்டிருந்த, ராம்குமாரின் 15 வயது மகன் ஹரீஸ் என்பவரை ஆபாசமாக திட்டி, தலையில் சாம்பாரை கொட்டினர். சேர்களை எடுத்து வீசி, டேபிள் உள்ளிட்ட பொருட்களை நொறுக்கினர். தடுக்க முயன்ற ராம்குமார், அவரது மனைவி மணி, 35 ஆகியோரை மூவரும் தாக்கினர். பின் காரில் வேகமாக தப்பிச் செல்ல முயன்றனர்.
அப்போது, விஜி வேகமாக காரை எடுக்க, கீழே நின்ற பாலசுப்ரமணியன், அருண்குமார் மீது மோதியது.இதில், பாலசுப்ரமணியனின் இடது காலில் எலும்பு முறிவும், அருண்குமாரின் தலையில் காயமும் ஏற்பட்டது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது தொடர்பாக, ராம்குமார் அளித்த புகார்படி, தஞ்சாவூர் பல்கலை போலீசார், பாலசுப்ரமணியன், அருண்குமார், விஜி ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். பாலசுப்ர மணியன், அருண்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து,எஸ்.பி., ரவளிப்ரியா உத்தரவிட்டுள்ளார்.

