நெல்லையில் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடியை கத்தியால் குத்திய பெண்ணின் அண்ணன் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை டவுன் மாதா கோவில் நடுத்தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவருடைய மகள் ரம்யா(21), பட்டதாரி. பேட்டை கோடீஸ்வரன் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் ஆனந்தராஜ் (25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இவரும், ரம்யாவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி, நேற்று ரம்யாவும், ஆனந்தராஜூம் ராமையன்பட்டியில் உள்ள பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு, பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த தகவல் கிடைத்ததும், ரம்யாவின் தந்தை கல்யாணசுந்தரம், தாய் செல்வி, அவரது அண்ணன் ராம்குமார்(27) மற்றும் அவரது உறவினர்கள் பேட்டை காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள், ரம்யாவிடம் பேசி தங்களுடன் வருமாறு அழைத்தனர். ஆனால், ரம்யா அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் கத்தியால் ரம்யாவை சரமாரியாக குத்தினார்.
இதனை தடுக்க முயன்ற ஆனந்தராஜின் கையிலும் கத்திக்குத்து விழுந்தது. வயிற்றில் கத்திக்குத்து விழுந்ததில் ரம்யா பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.உடனே ரம்யா, ஆனந்தராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்குமார், கல்யாணசுந்தரம், ராம்குமாரின் தம்பி விமல் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

