தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடுகளில் தங்க நகைகளை கொள்ளையடித்த கொலை, கொள்ளை வழக்கு உட்பட 23 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் கைது – ரூபாய் 5,00,000/- மதிப்புள்ள 22 பவுன் தங்க நகைகள் மீட்பு – தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.
கடந்த 2 மாதங்களாக புளியம்பட்டி, நாரைக்கிணறு மற்றும் கழுகுமலை ஆகிய காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றிருந்தது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் , மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மேற்பார்வையில் புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் தலைமையில் உதவி ஆய்வாளர் . செல்வன், சிறப்பு உதவி ஆய்வாளர் பொன்முனியசாமி, முதல் நிலைக் காவலர்கள் கொடிவேல், பிரபாகரன், காவலர்கள் செண்பகராஜ், விடுதலைபாரதிக்கண்ணன், மகேஷ் மற்றும் சுகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்து விரைந்து கைது செய்து, திருடப்பட்ட நகை மற்றும் இதர சொத்துக்களை மீட்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், சம்பவ இடத்தில் இருந்த கைரேகைகளை காவல்துறை தனிவிரல் ரேகைப்பிரிவினர் மூலம் ஆய்வு செய்த அறிக்கையின் அடிப்படையிலும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில் தென்காசி மாவட்டம் கடையம், கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் பாலமுருகன் (37) என்பவர் மேற்படி திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது, உடனே மேற்படி தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர், மேலும் விசாரணையில் அவர், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும் திருடியுள்ளதை ஒப்புக்கொண்டார். இவரிடமிருந்து ரூபாய் 5,00,000/- ரூபாய் மதிப்புள்ள 22 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
மேற்படி எதிரி பாலமுருகன் இருமுறை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டவர் என்பதும், அவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்கு உட்பட 23 வழக்குகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிசிடிவி காட்சிகளின் மூலம் தமிழ்நாடு அளவில் பொதுமக்களிடையே பிரபலமாக பேசப்பட்ட வழக்கான தென்காசி மாவட்டம், கடையம், கல்யாணிபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல் (70) மற்றும் அவரது மனைவி செந்தாமரை (67) ஆகிய முதிய தம்பதியினர் கடந்த 11.08.2019 அன்று தோப்பு வீட்டில் தனியாக குடியிருந்து வந்தபோது கொலை செய்ய முயற்சி செய்து, திருட முயன்றபோது மேற்படி செந்தாமரை தற்காப்புக்காக நாற்காலியால் தாக்க ஆரம்பித்தவுடன், அவரிடமிருந்து தப்பியோடியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி பிரபல கொள்ளையனை கைது செய்து, அவரிடமிருந்து தங்க நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்.

