ஏரல் அருகே மூதாட்டியை கொலை செய்து 9½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாழவல்லான் மேலூர் பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி மனைவி முத்துகிளி (74) என்பவரை கடந்த 3ம் தேதி அதிகாலை அவரது வீட்டின் பின்புறம் வைத்து மர்ம நபர் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து விட்டு, அவர் அணிந்து இருந்த 9½ பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஏரல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையில் உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம், முதல் நிலை காவலரகள் பொன்ராமசந்திரன் முருகசுந்தரம், மாரியப்பன், சரவணகுமார், சந்தனமாரி மற்றும் காவலர் பலவேச பார்த்திபன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.
தனிப்படையினரின் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மாவட்டம் வாழவல்லான் மேலூர் பகுதியை சேர்ந்த முருகையா மகன் ஆறுமுகராஜ் (46) என்பவர் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகராஜை போலீசார் கதைு செய்தனர். இவர் நெல்லை மாவட்டம், நாங்குனேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 24.04.2018 அன்று கணவன், மனைவி ஆகிய இருவரை கொலை செய்து விட்டு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற வழக்கிலும், சென்னையில் ஒரு கொலை முயற்சி வழக்கிலும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கொலை வழக்கில் எதிரியை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்.

