தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை குளத்தினை வீனஸ் ஹோம் அப்ளையன்சஸ் மற்றும் தொழில் நிறுவனத்தின் மூலம் குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் துவக்க நிகழ்ச்சி இன்று (03.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், கலந்துகொண்டு குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு பேருந்து நிலையம் அருகில் பொது கழிப்பறை கட்டுவதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து எட்டயபுரம் வட்டம் கன்னகட்டை ஊராட்சி வெ.தளவாய்புரத்தில் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன்னகட்டை ஊராட்சியில் மக்கள் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதை மாவட்ட ஆட்சியர் பாராட்டி, பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், வெளியிடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைபிடித்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, திருச்செந்தூர் வட்டம் உடன்குடி மற்றும் அடைக்கலாபுரத்தில் கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிக்கும் இடத்தினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், நேரில் பார்வையிட்டு கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டின் தரத்தினை ஆய்வு செய்தார். அப்போது, கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு தயாரிப்பதற்கு தேவையான உதவிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்து தரப்படும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் சிவசுப்பிரமணியன் (தூத்துக்குடி), கோகிலா (திருச்செந்தூர்), மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன், வட்டாட்சியர்கள் ஜஸ்டின் (தூத்துக்குடி), கோபாலகிருஷ்ணன் (ஸ்ரீவைகுண்டம்), முருகேசன் (திருச்செந்தூர்), அய்யப்பன் (எட்டயபுரம்), கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் அனிதா, உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன், மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

