தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா வைரசின் 2வது அலை தீவிரமாக பரவிய நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த சூழலில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதி கோரியிருந்தது.
இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டதன் பேரில், தமிழக அரசும் அனுமதி அளித்தது. இது தொடர்பாக கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தென்மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் மூன்று மாத காலத்திற்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நடப்பு மாதத்துடன் அதற்கான அனுமதி முடிவடைய உள்ளது. இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இன்று மனுதாக்கல் செய்துள்ளது.

