அமைந்தகரையில் உள்ள ஒரு வீட்டில் உள்ள சிலிண்டரில் பிடித்த தீயை அணைத்து அசம்பாவிதம் நிகழாமல் தடுத்த தலைமைக் காவலர் சரவணன் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை, அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் வீட்டிற்குள் இருந்த கேஸ் சிலிண்டரில் வாயு கசிவு ஏற்பட்டு, அடுப்பிலிருந்த தீ வீட்டிற்குள் பரவி வீட்டினுள் இருந்த பொருட்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. உடனே, நாராயணன் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில், K3 அமைந்தகரை காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு தலைமைக் காவலர் சரவணன் (த.கா.42734) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஒரு துணியை தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி, எரிந்து கொண்டிருந்த சிலிண்டர் மீது மூடி, சிலிண்டரில் பற்றிய தீயை அணைத்து, சிலிண்டரை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து போட்டார். இதனால் பெரும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கப்பட்டது.
இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்ட அமைந்தகரை காவல் நிலைய தலைமைக் காவலர் சரவணன் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

