குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – 3 பேர் கைது – உடனடியாக கைது செய்த குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரபட்டினம் அறம்வளர்த்த நாயகி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுயம்பு மகன் பெருமாள் (30). இவர் நேற்று அவரது வீட்டில் மர்மநபர்களால் அரிவாளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாளின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்கு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து எதிரியை விரைந்து கைது செய்ய திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப மேற்பார்வையில் குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மேற்படி உத்தரவின் பேரில் குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்ட பெருமாள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டுக்காரரானா சுடலை மகன் சுடலைமுத்து (46) என்பவருடன் பிரச்சனை செய்துள்ளார். இந்த முன்விரோதம் காரணமாக சுடலைமுத்து மற்றும் அவரது மகன் மாதேஷ் (19), சுடலைமுத்துவின் மருமகனான அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் செந்தில்நாதன் (30) ஆகியோர் சேர்ந்து பெருமாளை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து குலசேகரபட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சுடலைமுத்து, மாதேஷ் மற்றும் செந்தில்நாதன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எதிரிகளை உடனடியாக கைது செய்த குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையற்கரசி தலைமையிலான போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுவாக பாராட்டினார்.

