சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (40). தொழில் அதிபர். இவருக்கு அவரது உறவினருடன் சொத்து பிரச்னை இருந்து வந்தது. இது தொடர்பாக ராஜேஷ் உறவினர் திருமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் திருமங்கலம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ராஜேஷ் தனது சொத்துக்களை உறவினருக்கு எழுதி தரவேண்டும் என மிரட்டினர். ஆனால் ராஜேஷ் மறுத்துவிட்டார். எனவே, திருமங்கலம் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் உட்பட போலீசார் ராஜேசை ஒரு காரில் ஏற்றி பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே அவரை அடைத்து வைத்து உதவி கமிஷனர் சிவக்குமார் மற்றும் போலீசார் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரின் சொத்துக்களையும், பணத்தையும் பறித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ராஜேஷ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதன் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் ராஜேசை, உதவி கமிஷனர் சிவக்குமார் மற்றும் போலீசார் கடத்திச் சென்று மிரட்டி சொத்துக்களை எழுதி வாங்கியதும், பணம் பறித்ததும் உறுதியானது. இதையடுத்து இவர்கள் மீது 6 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

