பிரச்சனைகளுடன் வரக்கூடிய பெண்களுக்கு உதவிடுவதே மையத்தின் நோக்கம் என்ற அடிப்படையில் பெண்கள் உதவி மையம் என்ற திட்டத்தை தொடங்கிவைத்த திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் இந்திய அரசின் நிர்பயா சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்க்க திருச்சி மத்திய மண்டலத்தில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட்டது.
அதனடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் இன்று திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் ராதிகா இ.கா.ப மேற்பார்வையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.மூர்த்தி இ.கா.ப தலைமையில் பெண்கள் உதவி மையம் என்ற திட்டத்தை 15 காவல் நிலையங்களில் அமைக்கப்பட்டு ஒவ்வொரு உதவி மையத்திற்கும் 2 பெண் காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இலவச சேவை தொடர்பு எண் 181 – க்கு வரும் அழைப்புகளுக்கு உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் வகையில் தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் இத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட பெண் காவலரிடம் உதவி என்று கேட்டு வரக்கூடிய ஒவ்வொரு அழைப்பையும் உங்களுடைய பிரச்சனையாக கருதினால் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான 100 வகையான வழிகள் உங்களுக்கு கிடைக்கும் என்றும்
மேலும் பிரச்சனையோடு வரக்கூடிய பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உளவியல் ரீதியாக அவர்களோடு கலந்துரையாடி அவர்களுடைய பிரச்சினைகளை முழுமையாக புரிந்துகொண்டு அவற்றுக்கு முழுமையான தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம் என்று பெண் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
24 மணி நேரமும் பெண்கள் உதவி சேவையானது செயல்படும் என்பதால் இந்த உதவி மையத்தில் பணியில் இருக்கும் பெண் காவலர்களுக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் லேப்டாப் போன்றவற்றை திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் ராதிகா இ.கா.ப வழங்கினார்

