தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவியில், அரசு செட்டாப் பாக்ஸ்களுக்கு பதிலாக தனியார் செட்டாப் பாக்ஸ்கள் வழங்கினால் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தாலோ மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிப்பு செய்யப்பட்டிருந்தாலோ, வேறு பகுதிக்கு சந்தாதாரர் குடிபெயர்ந்து சென்றாலோ அல்லது தனியார் செட்டாப் பாக்ஸ்கள் பயன்படுத்தினாலோ உடனடியாக அவர்களிடம் இருக்கும் அரசு செட்டாப் பாக்ஸ்கள், யுஏ கார்டு, ரிமோட் மற்றும் பவர் அடாப்டர் ஆகியவற்றை அப்பகுதியிலுள்ள அரசு கேபிள் டிவி ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ், தகவல்
மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ‘டிராய்’ மூலம் உரிமம் பெற்று “தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்” டிஜிட்டல் ஒளிபரப்பு செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பொதுமக்களுக்கு கட்டணம் ஏதுமின்றி இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200-க்கும் மேற்பட்ட சேனல்களை மற்ற நிறுவனங்களை விட குறைந்த மாத சந்தா தொகையாக ரூ.140 + ஜிஎஸ்டி என்ற விகிதத்தில் பதிவு செய்யப்பட்ட உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கி வருகிறது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் செட்டாப் பாக்ஸ்களில் TACTV என்று பெயர் அச்சிடப்பட்டிருக்கும். பிற தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களை அரசு செட்டாப் பாக்ஸ் தான் என ஆபரேட்டர்கள் பொது மக்களை ஏமாற்றி வருவதாக தெரிகிறது. ஆகவே பொதுமக்கள் TACTV என அச்சிடப்பட்டிருக்கும் அரசு செட்டாப் பாக்ஸ்கள் தான் வேண்டும் என ஆபரேட்டர்களிடம் கேட்டுப்பெறுமாறும். உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களின் (பொதுமக்கள்) விருப்பத்திற்கு மாறாக தமிழ்நாடு அரசு செட்டாப் பாக்ஸ்களுக்கு பதிலாக தனியார் செட்டாப் பாக்ஸ்கள் மூலம் பொது மக்களுக்கு இணைப்பு வழங்கினால் சம்பந்தப்பட்ட சந்தாதாரர்கள் உடனடியாக 0461 2340021, 18004252911 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொது மக்கள் அரசு செட்டாப் பாக்ஸ் மூலம் கேபிள் ஒளிபரப்பினை மாத சந்தா கட்டணம் செலுத்தி பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படுவர். செட்டாப் பாக்ஸ்களுக்கு உரிமை கோர இயலாது. தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு செட்டாப் பாக்ஸ்கள் பழுதடைந்தாலோ மாதாந்திர கட்டணம் செலுத்தாமல் துண்டிப்பு செய்யப்பட்டிருந்தாலோ, வேறு பகுதிக்கு சந்தாதாரர் குடிபெயர்ந்து சென்றாலோ அல்லது தனியார் செட்டாப் பாக்ஸ்கள் பயன்படுத்தினாலோ உடனடியாக அவர்களிடம் இருக்கும் அரசு செட்டாப் பாக்ஸ்கள், AV கார்டு, ரிமோட் மற்றும் பவர் அடாப்டர் ஆகியவற்றை அப்பகுதியிலுள்ள அரசு கேபிள் டிவி ஆபரேட்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

