தூத்துக்குடியில் வாலிபர்கள் இருவரை டைல்ஸ் கல்லால் தாக்கிய தாய் – மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் கார்த்திக் (21), சக்தி பெருமாள் மகன் சரவணகுமார் (19) ஆகிய நண்பர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள பழனி என்பவரின் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்களாம். இதனை பழனியின் மனைவி பேச்சியம்மாள் (55), மகன் பசுங்கிளி (23) ஆகிய 2பேரும் கண்டித்து எங்கள் வீட்டு வாசலில் அமரக்கூடாது என்று கூறினார்களாம்.
இதில் ஏற்பட்ட தகராறில் கார்த்திக், சரவணகுமார் ஆகிய இருவரையும் அங்கு கிடந்த டைல்ஸ் கல்லால் பேச்சியம்மாளும், பசுங்கிளியும் சேர்ந்து தாக்கினார்களாம். இதில் காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்குப் பதிந்து, பசுங்கிளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள பேச்சியம்மாளை போலீசார் தேடி வருகின்றனர்.

